வடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்களுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னரே கூறி ஒன்றுபடவைத்தவர் தந்தை செல்வா

139 0

தந்தை செல்வநாயகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி 23 பெப்ரவரி 1997 இல் வீரகேசரி ஆசிரிய தலையங்கத்தில் இருந்து அவர் மறைந்தும் மறையாது மதிக்கப்படும் ஒருவர் என்பதை அறியலாம்.

இலங்கைத் தமிழினம் காலத்திற்கு காலம் பல தமிழ்த்தலைவர்களைப் பெற்று வந்துள்ளது. அந்த வரிசையில் சம கால அரசியல் நீரோட்டத்தையும் தமிழ் இனத்தின் போராட்ட வரலாற்றையும் முன்வைத்து நினைவோட்டத்தை மீட்டும்போது மனத்திரையில் நீங்காது நிலைத்திருப்பவர் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களே !

சிங்களப் பெரும்பான்மை வாதம் நாட்டில் வேரூன்றி சிறுபான்மை மக்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு தமிழினம் ஓரங்கட்டப்படுவதை தீர்க்கதரிசனத்தோடு உணர்ந்து அவற்றுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வைத்தவர் அவரே!

வடக்கு-கிழக்கு-மலையகம் என்று கூறுபட்டுக்கிடந்த தமிழ் மக்களை தட்டியெழுப்பி, இனத்துக்கு வரக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே எடுத்துச் சொல்லி அரசியல் ரீதியாக ஒன்றுபட வைத்தவரும் அவரே!

சத்தியாக்கிரகம், வீதி மறியல், ஆர்ப்பாட்டம் என்ற அண்ணல் மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழிப்போராட்டத்தை தொடக்கி தமிழ் மக்கள் மத்தியில் இன எழுச்சிக்கும் விழிப்புணர்வுக்கும் வித்திட்டவரும் அவரே!

அவர் இன்று உயிருடன் இருந்திருப்பாரேயானால் எதிர் வரும் மார்ச் 31 ஆம் திகதி தமது 100 வது பிறந்த தினத்தை கொண்டாடியிருப்பார்.தமிழினத்தின் தந்தை என்றும் தீர்க்கதரிசியென்றும் எல்லோராலும் அன்பொழுக அழைக்கப்பட்ட இவருக்கு அவர்பால் அன்பு கொண்ட தமிழ்ப்பெருமகன்மார் கூடி நாடளாவிய ரீதியில் நூற்றாண்டு விழாவைக்கொண்டாட முடிவு செய்திருப்பது காலத்தின் தேவை மட்டுமல்ல வரவேற்கப்பட வேண்டியதொன்றுமாகும்.

தந்தை செல்வா என்றுமே சொல்லின் செல்வராக விளங்கவில்லை.சிறிது பேசி பெரிய காரியங்களைச் செய்யும் செயல் வீரனாகத் திகழ்ந்தார்.

மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டபோது இன்று அவர்களுடைய கழுத்து அறுக்கப்படுகிறது, நாளை நமக்கும் இதே கதிதான் என்று தீர்க்கதரிசனத்தோடு கூறியவர்.ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்கள் வாழும் நாட்டில் ஒற்றையாட்சி நிலவுமானால் அது ஒரு இனத்தின் வாழ்வுக்கும் மற்றைய இனத்தின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என உணர்ந்தே இணைப்பாட்சித் தத்துவத்தை முன்வைத்தார்.ஆட்சியாளர்கள் மறுத்துவிட்டனர்.

தமிழினம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக வாழ்வதை அவர் விரும்பவில்லை.சலுகைகளை கெஞ்சிப்பெறலாம்.விடுதலையை போராடித்தான் பெறமுடியும் என்று உணர்த்தியவர்.இது கடந்த கால வரலாறு.இன்று அனுபவித்துவரும் துன்ப துயரங்களுக்கு விடிவு எப்போது என்று தமிழினம் ஏங்கித்தவித்துக்கொண்டிருக்கும் இந்தக்கால கட்டத்தில் தந்தை செல்வாவின் வாழ்க்கை வரலாற்றையும் செயற்திறனையும் இளைய பரம்பரையினர் மத்தியில் நூற்றாண்டு விழாக்கள் மூலம் பறைசாற்ற முன்வந்திருப்பது நொந்துபோயிருக்கும் நெஞ்சங்களுக்கு ஒத்தடம் கொடுப்பதாக இருப்பதோடு வாழ்வில் தெம்பையும் ஏற்படுத்துவதாக இருக்கும்.

அவர் மறைந்து கால் நூற்றாண்டு காலமாகிவிடினும் அவரின் மாண்புகளையும் இன மொழி நாடு என எண்ணி ஆற்றிய பணிகளையும் குறிப்பாக எழுபதுகளில் பிறந்த புதிய தலைமுறையினர் அறிய முடியாது போய்விட்டது.தமிழரின் அறிவியல் தோட்டங்கள்- யாழ் நூல்நிலையம் உட்பட அனைத்தும் அழித்தொழிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் வாழும் ஒரு சிலராவது உண்மை வரலாறுகளை ஆராய்ந்து வெளியிடுதல் காலத்தின் தேவையாகும்.

பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே – சுப்பிரமணிய பாரதியார்.

ம.ரூபன்