தமிழர்களின் வரலாற்றை அழிப்பதற்கே எமது பாரம்பரிய வழிபாட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன

102 0

Notes: சிறிமா –சாஸ்த்ரி  ஒப்பந்தம் ஒரு திட்டமிட்ட சதியாகும். அதன் மூலம் இலட்சக்கணக்கான இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்கள் தாயக பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருமே சைவர்கள். அவர்கள் இன்று இருந்திருந்தால் இலங்கையில் சைவர்களின் எண்ணிக்கை பெருகி நாம் வலுவான ஒரு சமூகமாக கைகோர்த்திருக்கலாம். 

இந்த நாட்டில் தமிழர்களின் வரலாற்றை   முற்றாக துடைத்தெறிவதற்கான ஆரம்பமே அவர்களின் பாரம்பரிய வழிபாட்டிடங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள்.   சைவர்கள் வேறு எந்த மதத்தினருக்கும் உரித்தான இடங்களையோ வழிபாட்டிடங்களையோ இது வரை  ஆக்கிரமித்ததில்லை.

ஆனால் இன்று சைவர்களின்  பாரம்பரிய ஆலயங்கள், வரலாற்று தொன்மங்கள் சிங்கள பெளத்தர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதை எம்மால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. இந்நாடு மேலும் சாபங்களுக்குள்ளாகி அழிவையும் துயரையும் நோக்கி போவதற்கு இவ்வாறான செயற்பாடுகளே காரணம் என இலங்கை சிவபூமி அறக்கட்டளை தலைவரும் தெல்லிப்பலை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தான தலைவரும் , அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவரும் சமூக சேவகரும்  உலகறிந்த சமய சொற்பொழிவாளருமான  செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறு.

திருமுருகன் கூறுகிறார். குருந்தூர் மலை விவகாரம், கீரிமலை ஆதி சிவன் ஆலயம் அழிக்கப்பட்டமை மற்றும் இலங்கையில் சைவ வழிபாட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அவர் வழங்கிய நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.

கேள்வி: இலங்கையில் போருக்கு பின்னரும் தமிழர் வாழ்விடங்கள் ,வரலாற்று வழிபாட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவது குறித்து ?

பதில்: ஈழத்திருநாட்டில் ஆதி சமயங்களில் சைவம் மிக முக்கியமானது. பெளத்தம் எந்தளவுக்கு முக்கியமானது என தென்னிலங்கையில் குறிப்பிடுகின்றார்களோ அதே போன்று சைவமானது நாட்டின் வடக்கு கிழக்கு மாத்திரமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கோலோச்சிய நெறியாகும்.

1500 களில் போர்த்துகேயர் இலங்கைக்கு வருவதற்கு முன்பே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக கரையோரப்பகுதிகளில் சைவ ஆலயங்களே இருந்தன. இதை சிங்கள பேராசிரியர்களும் தமது வரலாற்று நூல்களில் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

அவற்றில் பல அந்நியர் ஆட்சியில் அழிந்தன. சில ஆலயங்கள் இருந்த இடம் தெரியவில்லை. பல ஆலயங்கள் மீண்டும் அதே இடத்தில் புனர்நிர்மாணம் பெற்றன. காலியில் இருந்த சிவன் ஆலயம் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கியது. அது இருந்த இடம் தெரியவில்லை. இப்படி பல ஆலயங்களை கூறலாம். இந்நிலையில் யுத்தம் இடம்பெற்ற முப்பது வருடங்களில் தமிழர்களின் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர்  மூன்று  விடங்களை முன்னெடுத்தனர்.

  • தமிழர்களின் பாரம்பரிய இடங்களை அழித்தல்
  • அவர்களின் பாரம்பரிய வழிபாட்டிடங்களை தொல்லியல் என்ற பெயரில் பெளத்த புராதன இடங்களாக மாற்றுதல் 
  • இதன் மூலம்  சைவத்தையும் தமிழர்களையும் வலுவிழக்கச்செய்தல்

இப்போது மக்கள் நடமாட்டமே இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளை கொண்டு வந்து வைக்கின்றனர். இது வேதனையான விடயம். ஏனென்றால் பெளத்தத்துக்கும் சைவத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. தமிழர்களும் பெளத்த மதத்தை தழுவியவர்களாக இருந்திருக்கின்றனர்.

இது சிங்கள பெளத்தர்களுக்கு விளங்கவில்லை. போருக்குப் பின்னரும் இந்த ஆக்கிரமிப்புகளும் அநியாயங்களும் தொடர்கின்றன என்றால் இந்நாட்டில் ஆதி இனம், ஆதி நெறியை கண்டு இவர்கள் பயப்படுகின்றார்கள் என்பது தான் அர்த்தம்.

கேள்வி: தமிழர்கள் மற்றும் சைவநெறிக்கு எதிரான இந்த ஆக்கிரமிப்புக்கு என்ன காரணம்?

பதில்: பேரினவாத சிந்தனைகளைத் தவிர வேறு ஒன்றுமில்லை. தமிழர்களின் கல்வி சுதந்திரம் பறிக்கப்பட்டபோது தான் இளைஞர்கள் ஆயும் ஏந்தினார்கள். பின்னர் எமது தாயக மண்ணை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் தாராளமாக இடம்பெற்றன. இப்போது எமது சமயத்தின் மீது கை வைத்துள்ளனர்.

இந்த செயற்பாடுகள்  நாட்டுக்கு கேடு விளைவிக்கும். பெளத்தத்திலும் சைவத்திலும் அறம்,தர்மம் பற்றி பேசப்படுகின்றன. இவற்றுக்கு மாறாக நாம் எதை செய்தாலும் அது அழிவையே எமக்கு தரும். இன்று எமது நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். போர் முடிவுற்றும் கூட எமது நாடு பல நாடுகளிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது.

எந்த நேரமும் எமது நாட்டை ஆபத்துகள் சூழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.பொருளாதார வலு குன்றிய நாடாக நாம் இருப்பதால், யாரிடம்   நாடு அதிகமாக கடன் பெற்றிருக்கின்றதோ அந்நாடு இலங்கையை எப்போதும் ஆக்கிரமிக்கலாம். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என இவர்கள் சிந்தித்திருந்தால் இந்த சர்ச்சைகள், பிரச்சினைகள் இடம்பெற்றிருக்காது.

கதிர்காமல் ஒரு காலத்தில் சைவர்களின் ஆலயமாக இருந்தது. இன்று அது முழுமையாக பெளத்த இடமாக மாறி விட்டது. ஆனாலும் இருசாராரும் ஒற்றுமையாக வழிபடுகின்றனர். சைவர்களுடைய இந்த பக்குவம் பெளத்த மதத்தினருக்கு இல்லை.

கேள்வி: பெளத்த மத பிக்குகளினால் கூட ஏன் இந்த தெளிவை பெற முடியாதுள்ளது?

பதில்: நாம் பெளத்தத்துக்கோ வேறு எந்த மதத்துக்கோ எதிரானவர்கள் இல்லை. இதை ஏனைய மதத்தவர்களும் அறிவர். ஆனால் ஏனைய அனைத்து மதத்தவர்களும் சைவர்களுடன் முரண்படுகின்றனர். இடங்களை ஆக்கிரமிக்கின்றனர். பெளத்த துறவிகள் தமது சமயத்தை விளங்கிக்கொள்ளாமல்  சைவ ஆலயங்களுக்குச் சென்று குழப்பம் விளைவிக்கின்றனர். முன்னேஸ்வரம், கேதீச்சரம்,கோணேஸ்வரம் ஆகிய இடங்களுக்குச்சென்று முரண்படுகின்றனர். ஆனால் இன்று சைவ சமயத்துக்கு வந்துள்ள ஆபத்து பெளத்த துறவிகளால் மட்டும் ஏற்பட்டுவிடவில்லை. கிறிஸ்தவர்களாலும் இஸ்லாமியர்களாலும் ஆபத்து வந்துள்ளது.

இவர்கள் முப்பது வருட கால போரை பயன்படுத்தி, பிற நாடுகளிலுள்ள மத நிறுவனங்களின் உதவிகளைப் பெற்று, சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றோம் என்ற பெயரில்     மதம் மாற்றியுள்ளனர். பின்னர் அவர்களின் உறவினர்களை மாற்றினர். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பொருளை கொடுத்து மதம் மாற்றும் பணியை இவர்கள் செய்கின்றனர். இது சமயப் பணியா? இன்று பல பெயர்களின் வட பகுதிகளில் கிறிஸ்தவ சபைகள் உருவாகியுள்ளன. இவர்களிடம் தாராளமாக பணமும் வாகனங்களும் இருக்கின்றன.

இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறோம், வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டாம் என்றெல்லாம் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரம் அமைந்துள்ள பிரதேசம் ஆதி சைவர்களின் பூமி. போர்த்துகேயர் ,ஒல்லாந்தர் வருவதற்கு முன்னர் இங்கு சைவர்களே வாழ்ந்தனர்.

ஆனால் இன்று அப்பிரதேசத்தை ஒரு மறை மாவட்டம் என அறிவித்து அங்கு சைவர்களின் எந்த அடையாளமும் இருக்கக் கூடாது என்ற மனநிலையில் கத்தோலிக்க  மதகுருமார்கள் செயற்படுகின்றனர். கத்தோலிக்கர்களின்  ஆலயம் இருப்பது மடுவில். அங்கு சைவர்களும் செல்வர்.

ஆனால் பாலாவி தீர்த்தக்கரையில் அமைந்துள்ள திருக்கேச்சரத்துக்கு வந்து அவர்கள் கத்தோலிக்க ஆலயம் ஒன்றை அமைத்துள்ளனர். இங்கு கத்தோலிக்க மக்களே இல்லை. அது மட்டுமா? இங்குள்ள சைவர்களுக்கு பல விதத்திலும் மனஉளைச்சல்களை ஏற்படுத்தி முரண்பாடுகளை உருவாக்கினர்.

சிவராத்ரிக்கு அமைக்கப்பட்ட நுழைவு வளைவை ஒரு பாதிரியார் தலைமையில் உடைத்தெறிந்தார்கள். போர்த்துகேயர் ஒல்லாந்தர் வருவதற்கு முன்பு இங்கு வாழ்ந்த சைவர்களில் ஒரு சிலரே  பின்பு தமது தேவைக்காக மதம் மாறி பெயர்களை மாற்றிக்கொண்டு இங்கு கத்தோலிக்கர்களாக வாழ்ந்து வருகின்றனர் என்பது தான் உண்மை.அவர்களின் பூர்விகம் மற்றும் மூதாதையர்களின் பெயர்களை பார்த்தால் இது விளங்கும்.

இந்த உண்மைகள் தெரிந்தும் மதகுருமார்கள் இவ்வாறு செயற்படுவது வேதனைக்குரியது. இவ்வாறு நடந்து கொள்ளும் இவர்கள் எவ்வாறு தமது மக்களுக்கு நல்ல விடயங்களை போதனை செய்ய முடியும்? இப்போது பல மத நிறுவனங்கள் நாட்டில் சர்வதேச பாடசாலைகளை ஆரம்பித்து அங்கும் மத மாற்றங்களை ஆரம்பித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள சகல சர்வதேச பாடசாலைகளின் உரிமையாளர்களும் கத்தோலிக்கர்களே.

இங்கு சைவ பிள்ளைகள் அதிகமாக படிக்க வரும் போது அங்கு  சமயம் சம்பந்தப்பட்ட எந்த விடயங்களும் இடம்பெறாது பார்த்துக்கொள்கின்றனர். வழிபாடுகள், இறை வணக்கங்கள் எதுவும் இங்கில்லை.   தமது மதம் பற்றி மட்டுமே  போதிக்கின்றனர். ஆங்கில மொழியில் கற்க மாணவர்கள் இங்கு ஆர்வமாக வருவதால்  இப்பகுதிகளில் இயங்கி வந்த சைவ பாடசாலைகள் சில மூடப்படும் அபாயத்தில் உள்ளன. இது பாரதூரமான விடயமாக இப்போது மாறி வருகின்றது.

கேள்வி: இவ்வாறான அத்துமீறல்கள் தொடர்பில்  பிரதேச அரசியல் பிரதிநிதிகள்  ஏன் வாய் திறப்பதில்லை?

பதில்: இது இப்போதில்லையே, ஆரம்ப காலத்திலிருந்து இந்நிலைமை தொடர்கின்றதே! சிறிமா –சாஸ்த்ரி ஒப்பந்தத்தின் போது மீண்டும் தமிழகம் சென்ற பத்து இலட்சம் பேரும் சைவர்கள் தானே. அவர்கள் இன்று இருந்திருந்தால் எமது சமூகத்தின் சனத்தொகை கோடியை தாண்டியிருக்கும்.

நாம் வலுவான சமூகத்தினராக உருவாகியிருக்கலாம். அது ஒரு திட்டமிட்ட செயற்பாடாகும். அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட போது வடக்கு கிழக்கு தமிழ் பிரதிநிதிகள் எவருமே வாய் திறக்கவில்லையே? அப்போதும் மெளனமாகத்தானே இருந்தார்கள்.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் தாராளமாக காணிகள் இருந்தன. அவர்களை அங்கு குடியேற்றி விவசாயம் செய்ய வைத்திருக்கலாமே? அந்நேரம் அவர்கள் விட்ட தவறு தான் இன்று இலங்கையில் நாம் இப்போது பல இடங்களை பறி கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். மேலும் தற்போதுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் கிறிஸ்தவர்களும் அதிகம் இருக்கின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் எமக்கு இந்த பிரச்சினைகள் இல்லை.

கேள்வி: குருந்தூர் மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் நீதி மன்ற உத்தரவையும்  மீறி விகாரை கட்டப்பட்டு வருகின்றதே இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதா?

பதில்: நாம் பல தடவைகள் குரல் கொடுத்துள்ளோம். இப்போதும் குரல் கொடுத்து வருகிறோம். சின்ன சின்ன விடயங்களுக்கெல்லாம் எமது நாட்டின் நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி அங்கு ஒரு சம்பவம் நடப்பதை பார்த்துக்கொண்டு அவையும் மெளனம் காக்கின்றன. இதை என்னவென்று சொல்வது? நீதிதேவனின் மயக்கம் எமக்கு விளங்கவில்லை. எமது சமயத்துக்கும் வரலாற்றுக்கும் ஏற்பட்டுள்ள  அபாயத்துக்கு இது ஒரு நல்ல உதாரணம்.

மேலும் தொல்லியல் திணைக்களமானது இன்று முற்று முழுதாக பெளத்தத்தை நிலை நாட்டும் ஒரு அமைப்பாக மாறி விட்டது. அவர்கள் வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் அமைப்பினர் அல்லர். சைவ அடையாளங்களை எடுத்து விட்டு பெளத்த அடையாளத்தை அங்கு வைக்கும் செயற்பாடுகளை முன்னேஸ்வரம் தொடக்கம் கோணேஸ்வரம் வரை செய்து வருகின்றனர்.  இவர்கள் பெளத்த பாரம்பரிய பிரதேசங்களை விடுத்து சைவ பிரதேசங்களில் தமது காரியாலயங்களை திறக்கின்றனர்.

கன்னியாய் வெந்நீரூற்று பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவர்கள் அந்த கட்டண ரசீதில்   ‘அநுராதபுர பெளத்த கால புனித தீர்த்தம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் தேசத்தின் தொன்மையை காப்பதற்கான பிரிவினர் அல்லர். இவர்கள் வரலாற்றை மாற்றும் பிரிவினர்.

கேள்வி: கீரிமலை ஆதி சிவன் ஆலயம் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளதே?

பதில்:கீரிமலை ஆதி சிவன் ஆலயப்பகுதியிலிருந்து காங்கேசன் துறை வரையிலான பகுதிகள் கடந்த 33 வருடங்களாக உயர் பாதுகாப்பு பகுதியாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தன. இங்குள்ள சிவன் ஆலயம், கிருஷ்ணர் கோயில், கதிரைநாதன் கோயில் ஆகியவற்றுக்கு மக்கள் போக முடியாத சூழல் இருந்தது.

போர் முடிந்த பிறகு,  அகில இலங்கை இந்து மாமன்றத்துடனும் நாம் இணைந்து கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச, மைத்ரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, இப்போதுள்ள ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் சென்று இப்பகுதியை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

இங்கு அமைக்கப்பட்ட பிரமாண்டமான ஜனாதிபதி மாளிகையை இவர்களால் பராமரிக்க முடியவில்லை. எனவே அதை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வந்து, அதன் மூலம்  வருமானம் பெறும் வழிகள் குறித்து ஆராய்ந்த போது தான் சமீபத்தில் அம்மாளிகை அமைந்துள்ள இடத்துக்கு அருகிலுள்ள இடங்களை விடுவித்தனர்.

ஆனால் ஆலயங்கள் அமைந்திருந்த இடங்களை விடுவிக்கவில்லை. இந்நிலையில் வடக்கில் ஜனாதிபதி கலந்து கொண்ட தைப்பொங்கல் விழாவின் போது நல்லை ஆதினத்தை சந்திக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வந்த போது ஆலயப்பகுதிகளை விடுவிக்கும் படி நாம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

அவர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். அதன் பிறகு  வலி வடக்கு பிரதேச செயலாளர் ஊடாக இப்பகுதியில் கிருஷ்ணர் ஆலயத்தை பராமரித்து வந்த மூவர் அப்பகுதிக்கு செல்ல அனுமதி கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று பார்த்து வந்த பின்னரே   எமக்கு இந்த பேரதிர்ச்சி காத்திருந்தது.ஆதி சிவன் ஆலயம் அவ்விடத்தில் இல்லை என்றும் சித்தர் சடையம்மா மடம் முற்றாக அழிக்கப்பட்டிருப்பதாகவும் எமக்குத் தெரிவித்தனர்.

நாம் இதற்கு கடும் கண்டனங்களை வெளிப்படுத்தினோம். பின்பு கடந்த வாரம் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மூலம் அவ்விடத்துக்கு நான் சென்றேன். சிறுவயதில் நான் பார்த்து தரிசித்த ஆதி சிவன் ஆலயத்தை காணவில்லை. பல மக்கள் வந்து தங்கி உணவுண்டு இளைப்பாறி சென்ற பெண் சித்தர் சடையம்மாள் மடத்தை காணவில்லை. அவரது சமாதியும் அழிக்கப்பட்டிருந்தது.

பெண் சித்தர் சடையம்மாள்  1936 ஆம் ஆண்டு இங்கு வந்து தங்கி இங்கேயே சமாதியானவர். அவர் கதிர்காமம், நல்லூர் கந்தசாமி ஆலயம், தமிழகத்தின் திருச்செந்தூர் ஆகிய ஆலயங்களில் மடம் அமைத்தவர். யாழ்ப்பாணம் நல்லூரடியைச் சேர்ந்த அந்த சித்தர் இறுதி காலத்தை கீரிமலை ஆதி சிவனடியிலேயே  கழித்தார். அவரது  சமாதிக்குள் இருந்த சிவலிங்கத்தை பற்றைக்காடுகள் மூடியிருந்தன.

ஒருவாறு அதை நான் அடையாளம் கண்டேன். இப்பகுதியிலிருந்து ஏனைய சித்தர் சமாதிகளை காணவில்லை. நாம் ஆலயங்கள் இருந்த பகுதிகளை முழுமையாக விடுவிக்க கோரிக்கை விடுத்திருக்கின்றோம். அங்கு மீண்டும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆலயத்தை கட்டியெழுப்பிக்கொள்கிறோம் என்று கூறியுள்ளோம். எமக்கு மீள கிடைத்துள்ள பாரம்பரிய இடங்களை எவ்விதத்திலும் நாம் இழந்து விடக் கூடாது. இதற்க அனைவரினதும் ஒத்துழைப்பு எமக்குத் தேவை.

சிவலிங்கம் சிவகுமாரன்