விஜேதாச, அலிசப்ரி இன்று தென் ஆபிரிக்கா விஜயம்

122 0

நாட்டு மக்கள் மத்தியில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து தென்னாபிரிக அரசாங்கத்திடமிருந்து அனுபவப்பகிர்வினைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இக்காரணியை இலக்காகக் கொண்டு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இன்று செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தென்ஆபிரிக்கா செல்லவுள்ளது.

இலங்கைக்கான தென் ஆபிரிக உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ.ஸ்சல்க் அண்மையில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிய போது, தென் ஆபிரிகாவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு செயற்படும் விதம் தொடர்பில் அனுபவப் பகிர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

குழப்பான சூழ்நிலையின் பின்னர் உலக நாடுகளுக்கிடையில் அமைதி மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் வெற்றிகரமான செயற்பாடுகளை முன்னெடுத்த ஆணைக்குழுவாக தென் ஆபிரிக்காவின் உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு காணப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.