நிறைவேற்று அதிகாரம் சட்டவாக்கத்துறையை ஆக்கிரமித்துள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் சபாநாயகருடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம் என எதிர்தரப்பின் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் விவகாரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக ஆக்கிரமித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் சுயாதீன செயற்பாடுகளுக்கு பல்வேறு வழிமுறைகள் தடைகளை ஏற்படுத்தியுள்ளார். அரசியலமைப்பினால் சட்டவாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தற்போது முழுமையாக செயற்படுத்தப்படுவதில்லை.
நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றம் வசம் காணப்படும் பின்னணியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதி விடுவிப்பை நிதியமைச்சு தாமதப்படுத்துவது பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மலினப்படுத்துவதாக கருதப்படும்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை ஜனாதிபதி கவனத்தில் கொள்ளவில்லை.
பாராளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சபாநாயகருடன் இன்று விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.
ஜனநாயக உரிமையை பாதுகாத்துக் கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி அஹிம்சை வழியில் போராட வேண்டும்.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என குறிப்பிடும் ஜனாதிபதி பொருளாதார மீட்சிக்காக எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை மாறாக நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிப்பை தீவிரப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தவறான பொருளாதார கொள்கையினால் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள வரி கொள்கை தொடர்;ந்து அமுல்படுத்தப்பட்டால் நாட்டில் அமைதியற்ற தன்மையே தோற்றம் பெறும் என்றார்.

