பெண் தலைமை குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியால் எதிர்கொள்ளும் அன்றாட சவால்கள்

165 0

‘நானும் எனது அம்மாவும் தனியாகத்தான் இருக்கின்றோம், எங்களுக்கு ஆண் துணை என்று யாரும் இல்லை. நாங்கள் பனை ஓலையால் பாய், வட்டி, கூடை,  அலங்கார பொருட்கள் செய்து விற்பனை  செய்து எமது வாழ்க்கையை நடாத்துகின்றோம்.

நாங்கள் கடந்த 09 வருடங்களாக பனை ஓலை  மூலம் இவ்வாறான அலங்கார பொருட்களை வீட்டில் செய்து விற்பனை செய்து வருகின்றோம். கொரோனா பரவல், அதற்கடுத்து நாட்டில் உருவான பொருளாதார நெருக்கடி நிலைமையால் எமது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்று வரை அதிலிருந்து மீள முடியாத சூழல் காணப்படுகின்றது’.

என்று கூறுகின்றார் செங்கலடி, தளவாய் பிரதேசத்தை சேர்ந்த பெண்மணியான 39  வயதுடைய  கந்தசாமி விஜயநிலா அவர்கள். பனை ஓலை மூலம் வீட்டு பாவனை பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் செய்து அதனை விற்பனை செய்வதன் மூலம் தமது அன்றாட  வாழ்வாதாரத்தை கொண்டுசெல்லுகின்றார்.

அவரின் தாயும் அவரும் மட்டுமே தனிமையில் வசிக்கின்றனர். தளவாய் பிரதேசத்தை பொறுத்தவரை பனை ஓலைகள் மலிவான மூலப்பொருளாக கிடைத்தாலும் அதனை தொழில் நோக்கத்துக்காக இவர்கள் பெற்றுக்கொள்ளும் போது ஒரு ஓலை ரூ. 90 தொடக்கம் ரூ.150 விற்பனை செய்யப்படுகின்றது.

விஜயநிலாவின் குடும்பம் தையல் தொழிலை செய்தாலும் அதன் மூலம் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால் இந்த கைத்தொழிலை ஆரம்பித்தனர். ஆனாலும் இந்த தொழில்துறையில் காணப்படும் பல சவால்கள் இவர்களுக்கு பாரிய நெருக்கடிகளை  சமீப காலமாக  எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

நாடு எதிர்கொள்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள குடிசை கைத்தொழில்கள் பற்றி தேசிய ரீதியாக அதிகளவில் கவனம் செலுத்தப்படாமல் உள்ளது. இவ்வாறான விஜயநிலா போன்ற பெண்களை அணுகி பேசும்போது பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

மூலப்பொருளாட்களின் விலை, பனை ஓலைகளுக்கு நிறமூட்டுவதட்காக பயன்படுத்தப்படும் பொருட்கள், என்பன சடுதியாக விலை அதிகரித்துள்ளன. இதனால் இவர்களால் உருவாக்கப்படும் பொருட்களையும் அதிக  விலைக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக இவர்களின் விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

நாங்கள் வாரத்துக்கு ஒருமுறை எமது பொருட்களை செங்கலடி சந்தைக்கு கொண்டு செல்வோம்.சமீப காலமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கும் அதிக பணத்தை செலவிடுவதால் எனது உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு பெருமளவில் ஆர்வம் காட்டுவதில்லை.

இது எமது பொருட்களை விற்பனை செய்வதற்கு காணப்படும் பாரிய சவாலான விடயமாகும் என்று விஜயநிலா கூறுகின்றார்.அதேபோல் மழைக்காலங்களில் இவர்களுக்கு இந்த தொழிலை செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது.இவர்களின் மூலப்பொருளான  ஓலைகளை பெற்றுக்கொள்ள முடியாமையே இதற்கான காரணமாகும்.

இவர்களால் உருவாக்கப்படும் பனை பொருட்களை இவர்களிடம் சில வியாபாரிகள் வந்து பெற்று செல்கின்றனர். ஆனால் அதற்காக அவர்கள் குறைந்த விலையையே வழங்குகின்றனர். ஆனால் வெளிப்பிரதேசங்களில் இந்த பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவர்களின் மாத வருமானம் சுமார் 8000  வரை காணப்படுகின்றது.இதில் இவர்கள் மூலப்பொருள்களுக்காகவும் தமது வருமானத்திலேயே செலவிடுகின்றனர்.

இதேபோல் கலந்தர் வீதி மீராகேணி, ஏறாவூரைச் சேர்ந்த 57 வயதுடைய மீரா முகைதீன் ரசமத்தும்மா அவர்களும் 15 வருடங்களாக பனை ஓலை பின்னல் தொழிலையே செய்து வருகின்றார். கணவரைப்பிரிந்த இவருக்கு 15  வயதில் ஒரு பெண் பிள்ளை  உள்ளார். இவர்களின் பிரதான வருமானம் இந்த கைத்தொழிலையே தங்கியுள்ளது.

பாய், கூடை, போன்ற பின்னல் வேலைகளை இவர்கள் செய்து வந்தாலும் இவர்களின் பொருட்களுக்கு தகுந்த சந்தை வாய்ப்பு இல்லை என்பது இவர்களின் பிரதான பிரச்சினையாகும். தம்மால் செய்யப்படும் பொருட்களுக்கு தகுந்த நியாயமான விலை கிடைக்காமையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

‘’நாங்கள் 15 வருடங்களாக இந்த தொழிலை செய்து வந்தாலும் நாம் ஒவ்வொரு நாளும் கடுமையான பொழுதுகளை கடந்து வருகின்றோம். நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் எமது தொழில்துறையும் , நாளாந்த வாழ்க்கையும் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.

எனது மகளுக்கான கல்வி செலவுகளுக்கு அதிகமான செலவீனங்களை நான் சமாளிக்க வேண்டியுள்ளது. பாடசாலை உபகணங்கள் அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. ஆனாலும் நான் அவற்றை நான் மகளுக்கு வாங்கி கொடுக்கவேண்டியுள்ளது,அடுத்த வருடம் அவள் பரீட்சையை எதிர்கொள்ளவேண்டியுள்ளதால் மேலதிக வகுப்புகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது. அதற்கும் அதிகமான தொகையை செலுத்தவேண்டியுள்ளது.

இதுற்கு மேலதிகமாக எமது அடிப்படை தேவைகளையும் நாம் பூர்த்தி செய்வது கடுமையா சிரமமாக  உள்ளது எமது வீட்டு வசதியை பாருங்கள் , இதனை திருத்துவதற்கு நான் பலமுறை முயற்சி செய்தும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை’’. என்று கவலையுடன் கூறினார்.

அதே பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய இஸ்மாயில்  ஹாஜரம்மா அவர்களும் இத்தேவாரண தொழிலையே கடந்த 15 வருடங்களாக செய்து வருகின்றார். அவரின் கணவர் கொவிட் தொற்றால் மரணமாய்ந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது. ஆதாலால் குடும்ப பொறுப்ப்பை இவருக்கு சுமக்க வேண்டிய தேவையுள்ளது. இரண்டு மங்கள் இவருடன் இருக்கின்றார்கள். கணவரின் மரணத்துக்கு பின்னர் பகுதி நேரமாக இவர் செய்துகொண்டிருந்த பனை ஓலை பின்னல் வேலைகளை முழுநேர தொழிலாக செய்ய ஆரம்பித்துள்ளார்.

அவர் கூறுகையில் ‘’நான் இந்த தொழிலை முழுநேரமாக செய்ய ஆரம்பித்த காலப்பகுதியில் தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை உருவானது. பனை ஓலை, போக்குவரத்து, வீட்டு செலவுகள், பிள்ளைகளின் கல்வி செலவுகள் என்று அனைத்தையும் நான் தனி ஒரு ஆளாக சுமக்க வேண்டியுள்ளது .இது மிகவும் கஷ்டமாக உள்ளது’’ என்று கண்ணீருடன் கூறுகின்றார்.

ஹாஜரம்மா அவர்கள் பின்னும் கூடை பெரியது ஒன்று 250  ருபாய் முதல் 350 வரையும், சிறியது 120  ரூபாய் முதல் 170 ருபாய் வரையான விலைக்கும் விற்பனை செயகின்றார். ஆனால் ஏறாவூர் நகரத்தில் அதே கூடை ஒன்று 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை சமநிலையின்மைக்கு முறையான சந்தை வாய்ப்பு திட்டம் இன்மையே காரணமாகும்.இந்த பிரச்சினையை இங்கு பனை ஓலை கைத்தொழில் செய்யும் அனைவரும் கூறுகின்றதை அவதானிக்க முடிகின்றது.

இந்த பிரச்சினைக்கான தீர்வுகளை இவர்களுக்கு வழங்குவதற்கு இவர்களுக்கான அமைப்புகள் எதுவும் இல்லை என்பது ஒரு பாரிய பிரச்சினையாகும்.

கலந்தர் வீதி, மீராகேணியை சேர்ந்த 63 வயதுடைய பறி பாத்திமா அவர்கள் நாளாந்தம் இடியப்பம் விற்று தனது குடும்பத்தை கொண்டு நடத்தும் ஒரு தாயாவார். ஐவரும் கணவரை இழந்து 10 வருடங்களாகிறது. கடந்த 6  வருங்களாக இவர் இந்த தொழிலை செய்து வருகின்றார். 4  பேர் கொண்ட குடும்பமொன்று இவருடையது.

அவரின் கருத்தானது இவ்வாறு அமைந்துள்ளது. ‘’எனக்கு  முன்னர் ஒரு நாளைக்கு 5 கிலோகிராம் அரிசியில் இடியப்பம் செய்து விற்பனை செய்ய முடியும். ஆனால் இன்று அரிசி விலை 200 ரூபாயை அடைந்துள்ளது. அதேபோல் முன்னர் எரிபொருளும் எமக்கு மிகவும் மலிவாக கிடைத்தது.

ஆனால் இன்று அவ்வாறில்லை அனைத்துக்கும் நாம் மூன்று மடங்கு விலையை செலுத்தவேண்டியுள்ளது. இது எம்மை போன்றவர்களுக்கு ஒரு பாரிய பிரச்சினையாகும். அதனால் இப்போது நாங்கள் சுமார் 2 கிலோகிராம் அரிசி மட்டுமே பயன்படுத்துகின்றோம். எரிபொருளுக்காக நான் தேங்காய் மட்டையை மட்டுமே பயன்படுத்துகிறேன். இது மட்டுமே  கொஞ்சம் எமக்கு மலிவாக கிடைக்கின்றது.

அதனால் எரிபொருக்கான செலவீனங்களை குறைத்துக்கொண்டு எமது தொழிலை செய்ய முடிகின்றது.ஆனால் தினமும் இடியப்பம் வாங்கும் வகையில் எம்மிடம் வாடிக்கையாளர்கள் இல்லை, பக்கத்திலுள்ள கடைகளுக்கு விநியோகித்து அவை விற்பனை செய்யப்பட்டவுடன் தான் எமக்கான வருமானம் கிடைக்கும்’’. என்று கூறுகின்றார்.

பாத்திமாவை பொறுத்தவரை ஒரு நாளுக்கான முதலீடு 2000  ரூபாயாக உள்ளது. ஆனால் அவரின் ஒரு நாளைய இலாபம் 400  ருபாய் மட்டுமே ஆகும்.இந்த சிறிய இலாபத்தில் தான் அவர் அனைத்து குடும்ப செலவுகளையும்  கவனித்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. இந்த பிரதேசத்தில் இவரைப்போன்ற அநேக பெண்கள் வீடுகளில் தயாரிக்கும் உணவுகளை விற்பனை செய்து தமது வாழ்க்கையை நடாத்துகின்றனர்.

ஆனால் இவர்களில் பெரும்பாலான பெண்களுக்கு உள்ள பிரச்சினை இவர்களின் தயாரிப்புகளுக்கு போதிய நாளாந்த வாடிக்கையாளர்கள் இன்மையாகும். இவர்கள் அருகிலுள்ள கடைகளை நம்பியே தமது உணவுகளை உட்பத்தி செயகின்றனர். இதனால் இவர்களின் உற்பத்திகள் விற்பனையில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவுகின்றது.

அதேபோல் ஏறாவூர் சிங்கள குடியிருப்பை சேர்ந்த 51 வயதுடைய ஹிந்திக்கா ஷாம்லி அவர்களும் கைத்தொழிலாக பனை ஓலை பின்னுவதையே தொழிலாக  செய்து வருகின்றார்.இவர்களது குடியிருப்பு பகுதியானது 2016  ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இந்த பிரதேசத்தில்  சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர்.

ஆனால் இவர்களுக்கு இந்த பிரதேசத்தில் நிரந்தர தொழில்களை பெற்றுக்கொள்வதில் சிரமம் காணப்பட்டதால் இவர்களும் பனை கைத்திலுக்கும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர்.

ஆனால் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை போலவே இவர்கள் மத்தியிலும் பெண்கள் குடும்ப தலைமைத்துவத்தை வகிக்கும் சிலரை எம்மால் காணமுடிந்தது. அவர்களில் ஒருவரான சாமலியும் இந்த தொழில் துறையில் குறைந்த ஒரு வருமானத்தையே நாளாந்தம் பெற்று அதன் மூலம் தனது 5 பேர் கொண்ட குடும்பத்தை நிர்வகித்து வருகின்றார்.

சமாளித்து செல்லும் அளவில் காணப்பட்ட இவர்களின் நாளாந்த வருமானம் நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக மேலும் பின்னடைவை சந்தித்ததை அவரின் கருத்துக்கள் மூலமாக அறியமுடிந்தது.

‘’நான் இந்த பனை ஓலைகளை அருகிலுள்ள தமிழ் கிராமங்களில் இருந்தே தருவித்துக்கொள்கின்றேன். ஒரு ஓலை 150 ரூபாய்க்கும் அதிகமாகவே எமக்கு கிடைக்கின்றது.

அதேபோல் நிறமூட்டிகளும் அதிக விலை கொடுத்தே வாங்குகின்றோம். இதன் காரணமாக எமது தயாரிப்புகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாது. சில வியாபாரிகள் எமது தயாரிப்புகளை மிகவும் குறைந்த விலைக்கே கேட்கின்றனர்.

இதனால் நாம் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றோம் . தற்போது அனைத்து பொருட்களும் விலை கூடியுள்ள நிலையில் எனது  குடும்பத்தையும் நான் கவகிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலைமை எம்மை மிகவும் பாதிக்கின்றது.இதிலிருந்து மீண்டு வருவதற்கு எமக்கு எவ்வ்ளளவு காலம் எடுக்கும் என்று தெரியாது’’ என்று கூறுகின்றார்.

இவ்வாறாக செங்கலடி ஏறாவூர் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பெண் தலைமை குடும்பங்களின் நிலையானது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மூன்று சமூகத்துக்கும் பொதுவானதாகவும், சமாந்தரமானதாகவும் காணப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தாலும் இவ்வாறான விளிம்பு நிலையிலுள்ள மக்களை சமூக பொருளாதார ரீதியாக பாதுகாக்க எந்தவொரு உட்கட்டமைப்பும் இல்லை என்பதே இங்குள்ள பிரதான இடைவெளியாகும் . அதிலும் குறிப்பாக ஆண் துணை இன்றி காணப்படும் குடிசைக்கைத்தொழிலில் ஈடுபடும் பெண்களின் நிலையானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை செங்கலடி பிரதேசத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் திரு.ஷங்கர் அவர்களிடம் வினவியபோது. அவர் தெரிவித்ததாவது , ‘’இந்த பிரதேசமானது நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் அதிகமாக வாழும் வலயமாகும். பெரும்பாலான குடும்பங்களில் குடிசைக்கு கைத்தொழிலாக பனை ஓலைகளை பயன்படுத்தி செய்யப்படும் கைவினைப்பொருட்களில் தங்கியுள்ளனர். இவர்களின் நாளாந்த வருமானத்துக்கான தேவையை இதன்மூலம் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இருப்பினும் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையால் இவர்களின் தொழில்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .முன்னர் பனை ஓலைகளின் பெறுமதியும் குறைவாகவே இருந்தது,ஆனால் தற்போது ஒரு பனை ஓலை 170 வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இது இவர்களுக்கு பாரிய சவாலான விடயமாகும். அதனால் பலர் இந்த தொழிலை கைவிட்டு கூலி வேலைகளுக்கு செல்கின்றனர். இது எமது பிரதேசத்தின் பாரம்பரிய தொழிலாகும். எனவே இந்த தொழில் துறைக்கு அரசாங்கம் ஏதேனும் மானியங்களை வழங்க வேண்டியது அவசியமாகும்.’’ என்று தெரிவித்தார்.

அதேபோல் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகரும் சமாதான நீதவானுமாகிய திரு. மொஹமட் அவர்களும் இந்த பெண்தலைமை குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வரும் ஒருவராவார். பல தொண்டு அமைப்புக்களினூடாக இவ்வாறான குடும்பங்களுக்கு அவர் பல உதவிகளையும் செய்துள்ளார்.

நாம் அவரிடம் இந்த விடயங்கள் தொடர்பாக வினவியபோது அவர் தெரிவித்ததாவது, எமது ஏறாவூர் பிரதேசத்தில் பலர் பெண்களின் நாளாந்த வருமானத்தின் மூலம் தமது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பனை ஓலைகளின் மூலம் பின்னப்படும் அலங்கார பொருட்களை வீடுகளில் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.இந்த தொழிலானது சமீப காலமாக கடும் பிரயத்தனத்துக்கு மத்தியியிலேயே இடம்பெறுகின்றது. இதட்கு நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி பிரதான காரணமாகும். இந்த பொருட்களின் விற்பனை குறைவடைந்துள்ளது. அதேபோல் சந்தைகளில் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய தேவை அவர்களுக்கு எழுந்துள்ளது.

இதன் காரணமாக இவர்களின் உற்பத்திக்கு கேள்வி குறைவடைந்துள்ளது.இது இவர்களின் நாளாந்த வருமானத்தை கடுமையாக பாதித்துள்ளது. நான் சில முயற்சிகளை மேற்கொண்டு இவர்களுக்கான உதவிகளை செய்துள்ளோம். ஆனால் அதனை தொடர்ச்சியாக எம்மாலும் செய்ய முடியாது. எனவே இவர்களுக்கான ஒரு நிலையான திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கூறினார்.

இந்த விடயங்களை தொகுத்து நோக்கும் போது ஏறாவூர் , செங்கலடி பிரதேசங்களை சேர்ந்த பெண் தலைமை குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். குடும்பத்தின் பிரதான வருமான மார்க்கமாக இவர்களுக்கு குடிசை கைத்தொழில் காணப்படுகின்றது. நாம் விஜயம் செய்த பிரதேசங்களில் உள்ள குடும்பங்களில் பெரும்பாலவற்றில் அவர்களுக்கு ஒரு அரசு உத்தியோகம் கூட இருக்கவில்லை. இதனால் இவர்கள் எவ்வித பொருளாதார பின்புலமும் இன்றியே தமது உற்பத்திகளுக்கான முதலீடுகளையும் மேற்கொள்கின்றனர்.

இது இவர்கள் தமது உற்பத்திகளை விற்பனை செய்தால் மட்டுமே வருமானத்தை ஈட்டுவதற்கான காரணமாக உள்ளது. எனவே தமது தொழிலில் இவர்கள் விளிம்பு நிலையில் தொடர்ந்து இருக்கவேண்டியுள்ளது. இவர்களுக்கான சமூக பொருளாதார பாதுகாப்பு இங்கு கேள்விக்குறியாகியுள்ளது.

அதேபோல் இவர்களில் உற்பத்தி பொருட்களுக்கு நிலையான ஒரு சந்தை வாய்ப்பும் இல்லை என்பது தான் இவர்களின் பிரதான ஆவலமாகும்.இதனால் இவர்கள் பல தரகர்களிடம் தங்கியுள்ளனர். இது இவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் பெறுமதியில் தாக்கம் செலுத்துகின்றது.

மேலும் இவர்களின் உற்பத்திகளுக்கு தேவையான முன்பதிவுகளை செய்து இவர்களை ஊக்குவிக்க முடியும். இதனால் இவர்களின் வருமானத்துக்கு ஒரு நிச்சயத்தன்மை கிடைக்கும். அதேபோல்  இவர்கள் நிறுவனமயப்படாமை ஒரு பிரதான குறைபாடாகும். குறிப்பாக இவர்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப்பொருட்களுக்கு கொழும்பு உள்ளிட்ட வெளிப்பிரதேசங்களில் நல்ல கேள்வி நிலவுகின்றது.

ஆனால் இதனை முறையாக விநியோகம் செய்யக்கூடிய கட்டமைப்பு இல்லாத காரணத்தால் இவர்கள் அதன் முழுமையான பலன்களை அடைய முடியவில்லை.

இவர்கள் நிறுவனமயப்படும் போது அந்த வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கும் . எனவே இவர்களை ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவது பிரதேச சபையின் பொறுப்பாகும். அதன் மூலம் இவர்களின் வாழ்க்கை தரம் உயர்வடையும்.

இவாறான பெண் தலைமை குடும்பங்களில் வீட்டு வசதி , போசாக்கான உணவு , கல்வி, சுகாதாரம் என்பனவும் மிகவும் கீழ் மட்டத்திலேயே இருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இவர்களின் அடிப்படை தேவைகளும் உழைக்கும் பெண்களின் வருமானத்திலேயே தங்கியுள்ளது. அவற்றை தன்னிறைவு அடைய  செய்ய வேண்டியதும் அனைவரினதும் பொறுப்பாகும்.

இவர்களுக்கு இலகு தவணை கடனுதவிகளை வழங்குவதும், கைத்தொழில் அமைச்சுக்கூடாக இவர்களை நிறுவனமயப்படுத்துவதும் முதல் கட்ட நடவடிக்கைகளாகும்.

இதன் மூலம் இந்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இவர்கள் ஓரளவுக்கு மீண்டு  வரக்கூடியதாக இருக்கும். அதேபோல் இவாறான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு விசேட மானியங்கள் வழங்குவதும் இந்த சூழ்நிலையில் இவர்களை பொருளாதார ரீதியாக பாதுகாக்கும் வேலைத்திட்டங்களாகும்.

அருள்கார்க்கி