தனியார் நிறுவனம் மூலம் தேர்வான ஒப்பந்த ஓட்டுநர்கள் பிப்.15-ல் பணி தொடக்கம்?

82 0

தமிழக போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக, பணிமனைக்குள் பேருந்துகளை நிறுத்துதல், டீசல் நிரப்புதல் போன்ற பணிகளில் ஈடுபடும் பணிமனை ஓட்டுநர்களிடம், வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கும் பணியை வழங்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. பணிமனைக்குள் பேருந்துகளை இயக்கும் பணியை ஒப்பந்த நிறுவனங்களின் ஓட்டுநர்கள் மூலம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்த பணியை மேற்கொள்ள ஸ்டால்வார்ட் பீப்பிள் சர்வீசஸ் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த நிறுவனம்மூலம் தேர்வான ஓட்டுநர்கள் வரும்15-ம் தேதிமுதல் பணியில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.

மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: அண்ணா தொழிற்சங்க பேரவைமுன்னாள் தலைவர் ராஜு: போக்குவரத்து துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணி நியமனங்கள் செய்யப்படும் என்று தெரிவித்த திமுக அரசு,பணி நியமனம் செய்யாமல், இருக்கும் தொழிலாளர்களை வைத்தும்,ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமித்தும் துறையை நடத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு): பணிமனை ஓட்டுநர் பணியை அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களாலேயே மேற்கொள்ள முடியும். சமீபத்தில் குன்றத்தூர், அம்பத்தூர் பணிமனைகளில் பேருந்தை இயக்கியபோது விபத்தும் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பணியிடங்களில் மூத்த ஓட்டுநர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். பணியாளர் பற்றாக்குறையை போக்க நியமன நடவடிக்கையை நிர்வாகம் விரைந்து தொடங்க வேண்டும். ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதை சிஐடியு கண்டிக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.