கலாச்சார விழாக்கள் மூலம் ஊழியர்களின் மன அழுத்தத்தை போக்க முடியும்

90 0

 கலாச்சார விழாக்களில் பங்கேற்பதன் மூலம், ஊழியர்கள் புத்துணர்ச்சி பெறுவதோடு, உடன் இருப்பவர்களையும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க முடியும் என மத்திய வருவாய் துறை அதிகாரி கூறினார்.

மத்திய வருவாய் துறை சார்பில் நடைபெற்ற 34-வது அகில இந்திய மத்தியவருவாய் கலாச்சார திருவிழா சென்னையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில்இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட 19 வகையான கலைப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஜிஎஸ்டி, வருமானவரித் துறை மற்றும் சுங்கத் துறையைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் மண்டலிகா னிவாஸ் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல முதன்மை தலைமை ஆணையர் ஆர்.ரவிச்சந்தின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர், விழாவில் அவர் பேசுகையில், “இவ்விழாவில் இசை, நடனம், நாடகத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் தொழில் ரீதியான கலைஞர்களைப் போல தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இங்கு நடைபெற்ற நாடகம் சமூகத்துக்கு கருத்தை சொல்லும் அளவுக்கு அற்புதமாக அமைந்திருந்தது. இது போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் அவர்களது உடலும், மனதும் புத்துணர்ச்சி பெறுவதோடு, நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் பல்வேறு புதிய விஷயங்களை அறிந்துகொள்ள முடியும்.

மேலும், கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் ஊழியர்கள் தங்களது மன அழுத்தத்தைப் போக்க முடியும். ஊழியர்கள் புத்துணர்ச்சி பெறுவதோடு, உடன் இருப்பவர்களையும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க முடியும். இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், விழாக் குழு தலைவரும் சிஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை ஆணையருமான எம்.ஜி.தமிழ்வளவன், கூடுதல் ஆணையர் கே.அரவிந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.