சென்னை காந்தி மண்டபத்தில் விடுதலைப் போராட்ட வீரர் சிலைகள் முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

90 0

சென்னை கிண்டி, காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் சிலைகளை முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் திறந்து வைக்கிறார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அரசு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களுக்கு ரூ.34 லட்சத்திலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ரூ.18 லட்சத்திலும் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் ரூ.43 லட்சத்தில் வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்டுள்ளது. அவரது மார்பளவு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை முதல்வர் ஸ்டாலின் நாளை (பிப்.14) காலை 10 மணிக்கு நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார்.

காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், பெருங்காமநல்லூரில் ரூ.1.47 கோடியில் தியாகிகள் நினைவு மண்டபத்தை திறக்க உள்ளார். மேலும் பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் நிறுவ அடிக்கல் நாட்டுகிறார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.