தமிழில் தீர்ப்பு எழுதும் காலம் விரைவில் வரும்: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா நம்பிக்கை

87 0

தாய்மொழியிலே சிந்திப்போம், பேசுவோம், வழக்காடுவோம், நீதி வழங்குவோம், தமிழிலே தீர்ப்புரை எழுதும் காலம் விரைவில் வரும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை – கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி, கடந்த 9 முதல் 11-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில், மாநில அளவில், 22 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளை சேர்ந்த 66 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் நீதிமன்றத்தில் வாதாடுவதுபோன்று மாணவர்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். இதில் வெற்றி பெற்ற அணிகள் தேர்வு செய்யப்பட்டன.

போட்டி நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா பங்கேற்றார். போட்டியில் முதலிடம் பெற்ற தேனி அரசு சட்டக் கல்லூரி, இரண்டாம் இடம் பிடித்த விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது.

மாநில அளவில் தமிழில் மாதிரி நீதிமன்ற போட்டிகள் தற்போதுதான் நடத்தப்படுகின்றன. இது மிகவும் ஆரோக்கியமான விஷயம். தமிழுக்கு நாம் செய்யும் தொண்டு மட்டுமின்றி தமிழ் வளர வேண்டும் என்ற அடிப்படைக் காரணமும் உள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற காரணம், இந்தியாவிலேயே முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது தமிழ்தான்.