ரத்தோட்ட ரிவஸ்டன் கோனாமட பகுதியில் 200 அடி பள்ளத்தில் கார் வீழ்ந்து பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மனைவி உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை உக்குவெல குர்லவெல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான திலாருக்க்ஷி விக்ரமசிங்க என்ற பொலிஸ் சார்ஜன்டின் மனைவியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மாத்தளை தலைமையக பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது குடும்பத்துடன் ரிவஸ்டன் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது 11 வயது மகள், பொலிஸ் அதிகாரியின் தாய் மற்றும் அவரது எட்டு வயது மகள் ஆகியோரும் காயமடைந்துள்ளதுடன் அவர்களும் மாத்தளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

