தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் 6.63 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் குறுங்காடுகள் அமைக்கும் பணி தீவிரம்

76 0

திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் 6.63 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் குறுங்காடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் 6.63 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் குறுங்காடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாவது: திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி என இரு இடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்விரு அலுவலகங்களின் கீழ், திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, ஆவடி மற்றும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய வட்டங்கள் அடங்கியுள்ளன.

இந்த வட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் சுமார் 3,500 தொழிற்சாலைகள், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகங்களின் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டங்களின் கீழ் உரிய அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில், கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள தொழிற்சாலைகளில், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், காட்டுப்பள்ளி பகுதிகளில் உள்ள அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட 9 தொழிற்சாலைகளின் வளாகங்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள திறந்த வெளி நிலம் என, சுமார் 5.88 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இந்த குறுங்காடுகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள தொழிற்சாலைகளில், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 6 தொழிற்சாலைகளின் வளாகங்களில் 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் இந்த குறுங்காடுகள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பலன் தரும் மரங்களால் ஆன இந்த குறுங்காடுகள் அமைக்கும் பணி 3 மாதங்களில் முடிவுக்கு வர உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.