“எங்கள் நாட்டின் வளத்திற்கு அல்லாவே பொறுப்பு” – பாகிஸ்தான் நிதியமைச்சர் பேச்சு

96 0

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் வளத்திற்கு அல்லாவே பொறுப்பு” என்று அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தர் பேசியுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர், “பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையில் நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இப்போது உள்ள நிதி சிக்கல்களுக்கு வழி வகுத்தது என்னவோ இதற்கு முன்பு இருந்த இம்ரான் கான் தலைமையிலான அரசு. இப்போது அந்தப் பிழையின் விளைவை சரி செய்ய இரவு பகலாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.

முந்தைய ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் செய்த அழிவுதான் இது என்பது மக்களுக்கும் தெரிந்துவிட்டது. அல்லாவால் பாகிஸ்தானை உருவாக்க முடிந்தது. அதனால் பாகிஸ்தானை பாதுகாத்து, வளர்த்து, வளத்தைத் தருவதையும் அல்லாவே செய்வார்” என்றார்.

பாகிஸ்தான் பொருளாதார சிக்கல்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் கடன் பிரச்சினையாலும் பாகிஸ்தான் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மின்சார துறையும் பெரும் கடனில் மூழ்கி உள்ளது. சென்ற மாத இறுதியில் பாகிஸ்தானில் பணவீக்கம் 24.5% ஆக உயர்ந்தது.வெளிச்சந்தையில் அத்தியாவசிய, உணவுப்பொருட்களின் விலை, முந்தைய மாதத்தை விட 30% முதல் 50% வரை அதிகரித்த வண்ணம் உள்ளது. சாமானியர்களின் அன்றாட வாழ்க்கை சவாலாக மாறி வருகிறது. அந்நிய உதவி புதை மணல் போன்றது. அளவு கடந்தால், மீள்வது எளிதல்ல. எனவே, அந்நிய கடன் பெறுவதில் கூடுதல் கவனம் தேவை. அதைப் பெறுவதில் அலட்சியம் காட்டியதாலேயே இலங்கையைப் போல் இன்று பாகிஸ்தானும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.