முன்னுதாரண தலைவர் ஜெசிந்தா ஆர்டெர்ன் – உலக நாடுகள் கற்றதும் பெற்றதும் என்ன?

117 0

நியூசிலாந்தின் பிரதமர் பதவியிலிருந்து விடைபெற்று இருக்கிறார் ஜெசிந்தா ஆர்டெர்ன். நாட்டைக் காக்கும் சூப்பர் மேனாக சித்தரித்துக் கொண்டிருக்கும் உலகத் தலைவர்களுக்கு மத்தியில் மக்களோடு மக்களாக நின்று தனது ஐந்தரை ஆண்டு காலப் பணியை சிறப்பாகவும், நிறைவாகவும் முடித்திருக்கிறார் ஜெசிந்தா.

“நான் என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். இந்த ஐந்தரை ஆண்டுகளில் பெரிய சவால்களை நான் எதிர்கொண்டேன். நானும் மனிதிதான். அரசியல் தலைவர்களும் மனிதர்கள்தான். நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இது நான் விடைபெறுவதற்கான நேரம்” என ஜெசிந்தா தனது ராஜினாமா உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது நியூசிலாந்துக்கு மட்டுமல்ல, உலக அரசியலைப் பின்தொடரும் அனைவருக்கும் சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

காரணம், ஜெசிந்தா அரசியல் தலைவராக அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டார். உண்மையில் அவர் தனது அரசியல் வாழ்கையில் புகழின் உச்சியில் இருந்து கொண்டிருந்தார். அவர் மீதான விமர்சனங்களும் வலுவில்லாதாகவே இருந்து வந்தன. இந்த நிலையில், தானாக முன்வந்து தனது பதவியை ஜெசிந்தா ராஜினாமா செய்திருப்பது ஒருவகையில் நிச்சயம் பாராட்டப்படக் கூடியது.

பாலின சமத்துவத்திற்கான குரல்… – நியூசிலாந்தின் முதல் பெண் பிரதமர் ஜெசிந்தா அல்ல. அவருக்கு முன்னரே ஜென்னி ஷிப்லே, ஹெலன் கிளார்க் ஆகிய இருவரும் நியூசிலாந்தின் பிரதமராக இருந்திருக்கிறார்கள். எனினும், ஜெசிந்தா நியூசிலாந்தின் இளம் வயது பிரதமராக அறியப்படுகிறார்.

தனது 37 வயதில் பிரதமராக ஜெசிந்தா பதவி ஏற்றது முதலே, அவர் ஆணாதிக்க கருத்துகளுக்கு எதிராக நிறைய பதில் கூற வேண்டி இருந்தது. ஆனால், அவற்றை எல்லாம் வெறும் பேச்சளவில் மட்டும் எதிர்கொள்ளாமல் தனது நடவடிக்கையின் மூலம் ஜெசிந்தா நிகழ்த்திக் காட்டியதுதான் அவரது புகழுக்கு காரணமாகி இருக்கிறது.

பெண்களால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும், தாய்மையால் பெண்ணின் கனவுகளை தடுத்திட முடியாது என தொடர்ந்து கூறி கொண்டிருந்த ஜெசிந்தா, ஆணாதிக்க சிந்தனைகளுக்கு நேரடியாகவே பதில் கொடுத்தார். அப்படி ஒரு நிகழ்வுதான் பின்லாந்து பிரதமர் சன்னா மரினுடான சந்திப்பின்போது ஜெசிந்தாவுக்கு நடந்தது. இதனை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.

சன்னாவும், ஜெசிந்தாவும் பங்கேற்ற சந்திப்பில் செய்தியாளர் ஒருவர், “நீங்கள் ஒரே பாலினம், ஒரே வயதை உடையவர்கள் என்பதால் சந்தித்துள்ளீர்கள் என்று நிறைய நபர்கள் நினைக்கிறார்கள். உங்கள் இருவரிடமும் இருந்து ஒப்பந்தங்களை எதிர்பார்க்க முடியுமா” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு , “பாரக் ஒபாமாவும், ஜான் கீயும் ஒரே வயதில் உள்ளதால் சந்தித்தார்களா என்று யாராவது கேட்டிருப்பார்களா?” என்று கேள்வி எழுப்பி இருப்பார் ஜெசிந்தா.

சிறுபான்மையினர் பக்கம் நின்றவர்… – 2019-ஆம் ஆண்டு கிறிஸ்ட் சர்ச்யில் உள்ள மசூதியில் இனவெறி காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 அப்பாவி மக்கள் பலியாகினர். உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது இச்சம்பவம். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்திக்க ஹிஜாப் அணிந்து கொண்டு சென்றார் ஜெசிந்தா. நியூசிலாந்து உங்களுடன் துணை நிற்கிறது என்பதை தனது செய்கையால் உணர்த்தினார்.

அதுமட்டுமல்லாது, நாட்டின் சிறும்பான்மையினர்கள் பாதிக்கப்படும்போது, பெரும்பான்மையினரின் ஓட்டுக்காக மவுனித்து இருக்கும் தலைவர்கள் மத்தியில் ஜெசிந்தாவின் செயல் பரவலாக பாரட்டப்பட்டது. மேலும், கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை விற்பதற்கான தடையையும் ஜெசிந்தா கொண்டு வந்தார். இவ்வாறு கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டை ஜெசிந்தா கையாண்ட விதம் உலக நாடுகளுக்கு ஓர் உதாரணமாகியது.

கரோனாவை வென்றார்… – கரோனா குறித்த அச்சங்கள் உலக நாடுகளிடையே பரவிக் கொண்டிருந்தபோது, சற்றும் தாமதிக்காமல் எல்லைகளை மூடி உலக நாடுகளுக்கு கரோனாவுக்கு எதிரான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார் ஜெசிந்தா.

ஜெசிந்தாவின் தீவிர முடிவால் நியூசிலாந்தில் 100 நாட்களைக் கடந்து, கரோனா தொற்று இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதற்காக நியூசிலாந்து மக்களுக்கும், அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கும் உலக சுகாதார அமைப்பு வாழ்த்து தெரிவித்தது. கரோனாவை ஜெசிந்தா எதிர்கொண்ட விதம் மக்களிடையே அவருக்கான செல்வாக்கையும் வளரச் செய்தது.

எதிர்காலத்திற்காக சிந்தித்தார்… – நியூசிலாந்து இளைஞர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான புதிய தனித்துவமானதும், அதிரடியானதுமான சட்டத்தை ஜெசிந்தா தலைமையிலான அரசு அறிமுகம் செய்தது. 2025-ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான அரசு எடுத்தது. ஜன.1, 2008-ல் இருந்து பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக உலக அரசியல் அரங்கில் ஜெசிந்தா பாராட்டப்பட்டார்.

காலநிலை மாற்றம்: எரிமலை வெடிப்பு, வெள்ளம் போன்ற தொடர் இயற்கை சீற்றங்களை நியூசிலாந்து சந்தித்தபோது அதன் விளைவுகளை சர்வதேச அரங்கிலும் ஜெசிந்தா கொண்டு சென்றார். காலநிலை மாற்றத்தினால் கடலின் மட்டம் உயர்வதையும், பனிப் பாறைகள் உருகுவதையும், உணவுச் சங்கிலிகள் பாதிக்கப்படுவதையும் ஐ.நா. அரங்கில் முன்வைத்து, காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கையில் உலக நாடுகள் இறங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன் மட்டும் நில்லாது, அண்டார்டிக்காவில் காலநிலை மாற்றத்தினை கண்காணிப்பதற்காக சிறப்புத் தளம் ஒன்றை 200 மில்லியன் டாலர் செலவில் ஜெசிந்தா தலைமையிலான நியூசிலாந்து அரசு அறிவித்தது.

இவ்வாறு நியூசிலாந்தின் தனித்துவமான பிரதமராக ஜெசிந்தா விடைபெற்று இருக்கிறார்.

தனது பதவிகாலங்களில் ஜெசிந்தா ஒன்றைதான் ஆழமாக பதிவு செய்து வந்தார். ’Be empathetic’… அதாவது, வேதனையான சூழலில் ஒருவர் இருக்கும்போது அவரது நிலையில் நம்மைப் பொருத்திப் பார்ப்பது.. வரலாறும் ஜெசிந்தாவை இதற்காவே நினைவுக்கூரும்!

 

இந்து குணசேகர்