உணர்வுபூர்வமாக நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் கந்தசாமி முத்துக்குமார் அவர்களது இறுதி வணக்க நிகழ்வு.

520 0

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு, யேர்மனியின் தென்மாநிலத்திற்கு உட்பட்ட குன்சன்கவுசன் நகரப் பிரதிநிதியாகவும், பின்னர் கோட்டப் பொறுப்பாளராகவும் 1984 ஆம் ஆண்டு தொடக்கம் பணியாற்றிக் கடந்த 24.09.2025 அன்று, உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் கந்தசாமி முத்துக்குமார் அவர்களது இறுதி வணக்க நிகழ்வானது இன்று (29.09.2025) மிகவும் உணர்வுப்பூர்வமாக குன்சன்கவுசன் நகரத்திலே நடைபெற்றது.

அவரது வித்துடல் வைக்கப்பட்ட மண்டபத்திலே ஈகைச்சுடரினை அவரது துணைவியார் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக் கொடியினை யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் ஏற்றி, அரைக்கம்பத்திலே பறக்க விடப்பட்டது. ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளரின் புதல்வன் ஏற்றிவைத்தார். செயற்பாட்டாளர்களால் கையேந்தி வரப்பட்ட தமிழீழ தேசியக் கொடி அவரது வித்துடல்மீது போர்த்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து அனைத்துலகச் செயலகத்தினால் வழங்கப்பெற்ற நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு அறிக்கை வாசிக்கப்பட்டு, யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும், கல்விக்கழகத்தினால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும், தென்மாநில செயற்பாட்டாளர்கள் சார்பாக வெளியிடப்பட்ட பிரசுரமும் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து நினைவுரையினை யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் நிகழ்த்தினார்.

நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பெற்ற வரலாற்று ஆவணம், திருவுருவப்படப் பேளை, வித்துடல்மீது போர்த்திய தமிழீழத் தேசியக் கொடி என்பன, மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பிற்கு அமைவாக குடும்பத்தாரிடம் கையளிக்கப்பெற்று, தமிழீழத் தேசியக் கொடி கையேற்புடன் அவரது இறுதி வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது. இவ்வணக்க நிகழ்விலே பெருமளவான ஈழத்தமிழ் மக்கள், நகர வாழ்விட மொழியாளர்கள், செயற்பாட்டாளர்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர்.