தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், இந்திய, சிறிலங்கா கூட்டுச்சதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் 38ஆவது ஆண்டு மற்றும் தமிழீழ வான் படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் 24 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்புப் குழு யேர்மனிக்கிளையின் மாவீரர் பணிமனையால் டுசுல்டோவ் நகரில் மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்டது. இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அகவணக்கத்துடன் சுடர்,மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இவ்வெழுச்சி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் நிகழ்வுகளாக வணக்கப்பாடல்கள், கவிவணக்கம், நினைவுரை, எழுச்சி நடனம் போன்றன இடம்பெற்றன. அத்துடன் மாவீரர் பணிமனையால் நடாத்தப்பட்ட அன்னை பூபதி நினைவுக் கவிதைப்போட்டி மற்றும் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவுப் பேச்சுப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான நினைவுப்பரிசுகளும் அனைத்துலக கலைபண்பாட்டுக கழகத்தினால் நடாத்தப்பட்ட மே18 நினைவாக நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான
நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டது. சிறப்புரையை யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் துணைப்பொறுப்பாளர் திரு.சேரன் அவர்கள் ஆற்றினார்.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவராலும் பாடப்பட்டதோடு தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.






























































































































