தெல்தெனிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவர் மீது கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நிலையில் இருவர் சிகிச்சைக்காக தெல்தெனிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடமைக்காக சென்ற தெல்தெனிய பொலிஸ் காண்ஸ்டபல் இருவர் மின்சார சபை மாவத்தையில் பயணம் செய்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கட்டளை இட்டபோதிலும் அதற்கு செவி சாய்க்காமல் பயணம் செய்ததால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திகனை ரஜவெல்ல கோவில் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட 35 வயதுடைய இந்திக சஞ்ஜீவ, மற்றும் 28 வயதுடைய ருஜிர கயான் ஆகிய இருவருமே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

