சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை முழுமையாக உள்ளடக்கிய வரவு – செலவுத் திட்டம்

169 0

சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை முழுமையாக உள்ளடக்கியதாக 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்  திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் குறைப்பாடுகளை நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்போம் என இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை விடுத்து இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் யோசனை வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்,ஸ்ரீ லங்கா எயார் லைன் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்கும் எந்த யோசனையும் வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இந்த வரவு – செலவுத்  திட்டம் முழுமையாக புறக்கணித்துள்ளமை கவலைக்குரியதாக உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமையவே பல வரிகள் அதிகரிக்கப்பட்;டன.தற்போதும் நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு – செலவுத் திட்டத்தால் நடுத்தர மக்கள் எவ்வித பயனையும் பெறமாட்டார்கள்.

இந்த வரவு – செலவுத்  திட்டத்தின் ஊடாக தனது அரசியல் செல்வாக்கை தொடர்ந்து பலப்படுத்திக் கொள்ள ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார். இந்த வரவு – செலவுத்  திட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்போம் என்றார்.