கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திடீர் இடமாற்றம்

83 0

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இதுவரை கடமையாற்றிய வைத்தியர் ந.சரவணபவன் கொழும்பு சுகாதார அமைச்சின் செயலாளரினால் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கிளிநொச்சி பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திலீபன் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட மோசடிகள், முறைகேடுகள் குறித்த விசாரணைகள் நிறைவுபெறும் வரை வைத்தியர் ந.சரவணபவன் தற்காலிக இணைப்பில் நீடிப்பார் எனவும் தெரியவருகிறது.

 

கிளிநொச்சியில் உள்ள  வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையோடு தொடர்புபட்ட முறைகேடுகளை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆரம்ப புலன் விசாரணைக் குழுவானது கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் கடமையாற்றும் இரு அரச அதிகாரிகள் மற்றும் மூன்று அரச அலுவலர்கள் தாபன விதிக்கோவையின் XLVIII ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான அரச அலுவலர்களால் புரியக்கூடிய குற்றங்கள் பற்றிய முதலாவது அட்டவணை மற்றும் இரண்டாவது அட்டவணை ஆகியவற்றின் கீழ் வரும் குற்றங்களைப் புரிந்துள்ளதாக கண்டறிந்துள்ளது.

இதன் அடிப்படையில்  குறித்த நபர்களுக்கு எதிராக மாதிரி குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் உரிய ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாகவே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.