சர்வதேச பாடசாலைகளை கண்காணிக்கும் நடவடிக்கை அடுத்த வருடம் முதல்

129 0

நாட்டில் 300க்கும் மேற்பட்ட சர்வதேச பாடசாலைகள் இயங்கிவருவதுடன் ஒருஇலட்சத்தி 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

ஆனால் அந்த பாடசாலைகளை கண்காணிக்கும் நடவடிக்கை எதுவும் இதுவரை நாட்டில் மேற்கொள்ளப்படவில்லை. என்றாலும் அடுத்தவருடம் முதல் சர்வதேச பாடசாலைகளை கண்காணிக்கும் வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நிலையிற்கட்டளை 27 இன் 2கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால், சர்வதேச பாடசாலைகளின் தரம், அதில் கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

நாட்டில் 300க்கும் மேற்பட்ட சர்வதேச பாடசாலைகள் இயங்கிவருகின்றன. அதில் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர்.

இந்த மாணவர்கள் பெரும்பாலும் எமது நாட்டு பிள்ளைகளாகும். இந்த பாடசாலைகள் கம்பனி சட்டத்தின் கீழே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அதனால் இதுவரை காலமும் சர்வதேச பாடசாலைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

அதனால்  சர்வதேச பாடசாலைகளை கண்காணிக்கும் வேலைத்திட்டத்தை நாங்கள் தற்போது தயாரித்திருக்கின்றோம். அதன் பிரகாரம் 2பிரிவுகளின் கீழ் அதனை செய்ய எதிர்பார்க்கின்றோம்.

ஆரம்பமாக கல்வி அமைச்சின் கீழ் இருக்கும் தனியார் பாடசாலை பிரிவில் சர்வதேச பாடசாலைகள் கட்டாயம் பதிவு செய்யவேண்டும். இதன்போது அனைத்து தரவுகளும் வழங்கப்படவேண்டும்.

அடுத்ததாக சர்வதேச பாடசாலைகளின் தரம் தொடர்பில் தேசிய கல்வி ஆணைக்குழுவினால் கண்காணிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனால் சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் கண்காணிக்கும் நடவடிக்கையை அடுத்த வருடம் ஆரம்பத்தில் இருந்து மேற்கொள்ள இருக்கின்றோம்.

ஆனால் பதிவு செய்யும் நடவடிக்கையை உடனே மேற்கொள்ளாமல், அந்த பாடசாலைகளின் தரம், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் தரம் போன்ற விடயங்களை ஆராய்ந்து பார்த்தே பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம் என்றார்.