காணாமல்போனோர் என எவருமில்லையென தெரிவித்துள்ளமை ஆத்திரத்திற்குள்ளாக்கியுள்ளது

165 0

விடுதலை புலிகள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என இராணுவத்தினரும், காணாமல் போனோர் என எவருமில்லை என காணாமல் போனோர் அலுவலகத்தின் தவிசாளரும் குறிப்பிட்டுள்ளமை பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் ஆத்திரத்திற்குள்ளாக்கியுள்ளது.

இவ்வாறான கருத்துக்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீதியமைச்சரிடம் வலியுறுத்தினார்.

சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (8) இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நீதியமைச்சு முன்னெடுத்த நடமாடும் சேவை வரவேற்கத்தக்கது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு புலம்பெயர்ந்துள்ளவர்களின் நலன் தொடர்பில் நீதியமைச்சர் கரிசணை கொண்டுள்ளமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்ற மேலும் 33 ஆயிரம் இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வர எதிர்பார்த்துள்ளார்கள்.

பல்வேறு காரணிகளினால் அவர்கள் நாட்டுக்கு வருவது தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களை மீள்குடியமர்த்த நீதியமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

காணாமல் போனோர் என எவரும் கிடையாது என காணாமல் போனோர் அலுவலகத்தின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தான் காணாமல் போனோர் அலுவலகத்தின் பொறுப்பாகும்.

அதனை விடுத்து விசாரணைகளை மேற்கொள்ளாமல், இறுதி தீர்மானத்தை எடுக்காமல் காணாமல் போனோர் என எவரும் கிடையாது என்று அவர் எவ்வாறு குறிப்பிட முடியும்.

விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளதாக தகவலறியும் சட்டத்தின் ஊடாக அறிக்கையிடப்படுத்தப்பட்டுள்ளது. தமது உறவுகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இராணுவம் மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் கருத்துக்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை மலினப்படுத்தும் வகையில் உள்ளது. முரணான கருத்துக்களினால் தான் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருசில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

ஆகவே காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நீதியமைச்சர் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ காணாமல் போனோர் அலுவலகத்தின் தவிசாளர் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை. அறிவுறுத்தியமைக்கு நன்றி இவ்விடயம் தொடர்பில் நான் அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கிறேன் என்றார்.