மக்கள் ஆதரவுடன் எம்மால் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும்

162 0

நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வை கோருகிறார்கள். மக்கள் ஆதரவுடன் எம்மால் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சி தலைவரிடம் சிறந்த தலைமைத்துவம் கிடையாது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என சமுர்த்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியலில் பலவீனமடைந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள்.பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக பொதுஜன பெரமுன விட்டுக் கொடுப்புடன் செயற்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அரசியல் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் உள்ளன.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசியல் கொள்கைக்கு முன்னுரிமை வழங்கு முடியாது என்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்து,அவர் தலைமையிலான அரசாங்கத்தில் ஒன்றிணைந்துள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.குறுகிய அரசியல் நோக்கத்தை இலக்காக கொண்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துடன் ஒன்றிணையவில்லை.

விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் தரப்பினர் நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வரவில்லை.அரசாங்கம் பலவீனமடையும் போது எதிர்க்கட்சி ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்கும்,இதுவே உலக அரசியல் வழக்கம்,ஆனால் அரசாங்கத்தை பொறுப்பேற்றுமாறு பலமுறை அழைப்பு விடுத்தும்,எதிர்க்கட்சி தலைவர் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தை ஏற்கவில்லை.தற்போது வீதியில் இறங்கி போராட்டத்தில் மாத்திரம் ஈடுப்படுகிறார்.

ஊன்னு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் வகையில் அரசாங்கம் எல்லை நிர்ணய குழுவை நியமித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் குறைப்பாடுகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கும் போது அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எதிர்தரப்பினர் செயற்படுகிறார்கள்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை,பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வினை கோருகிறார்கள்.பொருளாதார பாதிப்பில் இருந்து வெகுவிரைவில் மீள முடியும்.மக்கள் ஆதரவுடன் மீண்டும் எம்மால் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்றார்.