முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சீனிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டமை தொடர்பில் கணக்காய்வாளரினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தேசிய வருமான திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தனக்கு கிடைக்கப் பெறும் எனத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி, குறித்த அறிக்கையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனிக்கான இறக்குமதி வரியை அப்போதைய அரசாங்கம் 50 ரூபாவிலிருந்து , 25 சதமாகக் குறைத்தது. எவ்வாறிருப்பினும் இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்த்தவாறு எந்தவொரு நன்மையும் மக்களை சென்றடையவில்லை. இந்த வரி குறைப்பின் ஊடாக 1670 கோடி ரூபாவை அரசாங்கம் அர்ப்பணித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த தொகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்ற பரிந்துரையும் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் வரி வருமான திணைக்களத்தின் ஊடாகவே இந்த தொகையை மீளப் பெறுவதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்த முடியும்.
அதற்கமைய இதற்குரிய அறிக்கையொன்றை தயாரிக்குமாறு வரி வருமான திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். அந்த அறிக்கை இவ்வாரம் எனக்கு கிடைக்கப் பெறும். குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் , அதன் பின்னர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

