ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை

155 0

ஐக்கிய மக்கள் சக்தி அடுத்து ஆட்சியைக் கைப்பற்றும் கட்சியாக உள்ளமையினால், எம்மில் பலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக போலியான செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு உறுப்பினரும் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2011 ஆம் ஆண்டு முதல் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவே தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான குழுவின் தலைவராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

எனினும் அவர் பொறுப்புடன் அந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. தற்போதுள்ள முறைமையில் தேர்தல் நடத்தப்பட்டால் பொதுஜன பெரமுனவும் , ஐக்கிய தேசிய கட்சியும் படுதோல்வியடையும் என்பதனாலேயே அதனை மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.

கடந்த வாரம் 1.4 பில்லியன் ரூபா பெறுமதியுடைய அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாதளவிற்கு பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் , இவ்வாறு ஒரு பில்லியன் ரூபா பெறுமதியுடைய தடுப்பூசிகள் காலவதியாகியுள்ளமைக்கு யார் பொறுப்பேற்பார்கள்?

இது ஒருபுறமிருக்க , மறுபுறம் சுமார் 50 நாட்களாக கடலில் நங்கூரமிடக்கப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பல்களுக்கு செலுத்தப்பட வேண்டிய தாமதக் கட்டணம் 250 கோடி ரூபாவை அண்மித்துள்ளது.

டொலரை தயார்படுத்திக் கொண்டு கப்பலை முற்பதிவு செய்வதற்கு பதிலாக , முற்பதிவு செய்த கப்பல் நாட்டை வந்தடைந்த பின்னர் டொலரைத் தேடுகின்றனர். செலுத்தப்படவுள்ள பாரிய தாமதக் கட்டணம் அப்பாவி மக்களின் வரிப்பணமாகும்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள எரிபொருள் இறக்குமதி தொடர்பான தகவல்களை வழங்குமாறு எழுத்து மூலம் எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் இறக்குமதி தேசிய பாதுகாப்பு வாய்ந்த விடயமா? அதன் காரணமாகவா அரசாங்கம் தகவல்களை வழங்க மறுக்கிறது? இல்லை. இவ்விடயத்திலும் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றனர். அதன் காரணமாகவே அரசாங்கம் தகவல்களை வழங்க மறுக்கிறது.

எகிப்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அமெரிக்க மற்றும் சீன ஜனாதிபதிகளோ, இந்திய மற்றும் பிரித்தானிய பிரதமர்களோ செல்லவில்லை.

ஆனால் கடும் டொலர் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள எமது நாட்டு ஜனாதிபதி மாத்திரம் , 10 – 15 பேருடன் எகிப்து சென்றுள்ளார். மக்களை அர்ப்பணிப்புக்களுக்கு தயாராகுமாறு கூறும் ஜனாதிபதியும் , இவ்வாறான விடயங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பெரும்பாலானோர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானதாகும். தற்போது பிரதான எதிர்கட்சியாகவும் , எதிர்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றவுள்ள கட்சி என்பதாலும் இவ்வாறு கட்சி தொடர்பில் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன என்றார்.