வடமாகாணக் கல்வித்துறை மோசடிகள் தொடர்பில் ஜோசப் ஸ்ராலின் எச்சரிக்கை!

158 0

வடமாகாணத்தின் நான்கு பெரிய பாடசாலைகள் உட்பட 11 பாடசாலைகள் சம்பந்தமாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை நாங்கள் முன்வைத்திருந்தோம். எனினும், இதுசம்பந்தமாக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

நேற்று (06) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்திலும், வடமாகாணத்திலும் கல்வி சம்பந்தமாக இடம்பெறும் பல்வேறு ஊழல் மோசடிகள் சம்பந்தமாக இலங்கை ஆசிரியர் சங்கம் செய்த முறைப்பாடுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் இழுத்தடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

வடமாகாணக் கல்வித் துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் வடமாகாணக் கல்வி அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

வடமாகாண ஆளுநர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் வடமாகாணத்தில் கல்வியில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக வடமாகாணத்தின் நான்கு பெரிய பாடசாலைகள் உட்பட 11 பாடசாலைகள் சம்பந்தமாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை நாங்கள் முன்வைத்திருந்தோம். எனினும், இதுசம்பந்தமாக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தற்போதைய வடமாகாணக் கல்விப் பணிப்பாளரும் இத்தகைய ஊழல் செயற்பாடுகளுக்கு உடந்தையாகத் தான் செயற்பட்டு வருகின்றார்.

வடமாகாண ஆளுநர் புதிதாக கடமைகளைப் பொறுப்பேற்ற போது அவர் சுதந்திரமாகச் செயற்படுகின்ற போக்கை அவதானித்த போதிலும் தற்போது அரசியல் தேவைகளுக்காக குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற வகையில் செயற்பட்டு வருகிறார். இத்தகைய செயற்பாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசனும் கலந்து கொண்டிருந்தார்.