உலக நாடுகள் முன்னேறிச் செல்லும்போது நாம் ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றோம்

94 0

அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் உலக நாடுகள் முன்னேறிச்செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனால் நாங்கள் தனிப்பட்ட நோக்கங்களுக்காக யாப்பு திருத்தங்களை மேற்கொண்டு ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

1078ஆம் ஆண்டு அரசியலமைப்பு 22 ஆவது தடவையாகவும் திருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த திருத்தங்கள் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை எமக்கு செய்ய முடிந்ததா என பார்க்க வேண்டும்.

ஜேஆர் கொண்டுவந்த 1978 அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்குக் நாங்கள் அன்று முதல் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம்.

அந்த நிலைப்பாட்டிலேயே இன்றும் இருக்கின்றோம். நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்க பல போராட்டங்களை நாங்கள் மேற்கொண்டோம்.

அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்க எம்முடன் இணைந்து போராட்டம் செய்த சிலர் நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்கள்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்குவதாக தெரிவித்தே இவர்கள் அந்த பதவிக்கு வந்தார்கள். ஆனால் அவர்கள் யாரும் அதனை செய்யவில்லை.

இறுதியாக 19ஆம் திருத்தத்தை நாங்கள் கொண்டுவந்து அதிலும் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

என்றாலும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்க முடியாமல் போனது. அதேநேரம் தேர்தல் முறை திருத்தம் மேற்கொள்வதாகவும் நாங்கள் தெரிவித்தோம். அதனையும் எங்களால் இறுதி நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் போனது.

மேலும் உலக நாடுகள் தங்கள் நாடுகளின் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது அந்த நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலாகும். அவ்வாறே அரயலமைப்பு திருத்தங்கள் மூலம் உலக நாடுகள் முன்னேறிச்செல்கின்றன.

ஆனால் நாங்கள் 20தடவைகள் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொண்டும் ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றோம். 17 ஆம் திருத்தம் மேற்கொண்டு அதில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் பல திட்டங்களை கொண்டுவந்தோம்.

ஆனால் 18 ஆம் திருத்தம் மூலம் அது மாற்றியமைக்கப்பட்டது. 19 ஆம் திருத்தம் கொண்டுவந்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.

ஆனால் 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து அதனை முற்றாக இல்லாமலாக்கியது. அதன் விளைவாக நாடு வங்குராேத்து அடைந்தது. அதனால் மக்கள் போராட்டங்கள் இடம்பெற்றன. இதன் காரணமாகவே மீண்டும் அரசியல் அமைப்பு திருத்தம் மேற்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.