சில ஊடகங்கள் தாம் தான் நாட்டையும், பாராளுமன்றத்தையும் ஆள்வதாக நினைத்துக் கொண்டிருக்கின்றன

247 0

ஒருசில ஊடகங்கள் தாம் தான் நாட்டையும், பாராளுமன்றத்தையும் ஆள்வதாக நினைத்துக் கொண்டிருக்கின்றன.

ஊடகங்களுக்கு தேவையானவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதால் தான் நாடு இன்று இந்த நிலையை எதிர்கொண்டுள்ளது. இனி இதற்கு இடமளிக்க முடியாது என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறையில் உள்ளவருக்கு சார்பாக எனது கனிஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராகுவதால் நான் அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என பிரதான நிலை பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதால், எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

ஆகவே இந்த செய்தி தொடர்பில் பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை தெரிவுக்குழு ஊடாக விசாரணையை முன்னெடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) சிறப்புரிமை மீறல் பிரச்சனையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதை உங்களுக்கு (சபாநாயகர்) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளேன். பாராளுமன்றத்தில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை தெரிவுக்குழு உள்ளது. பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் இந்த தெரிவுக்குழுவில் முறைப்பாடு செய்வார்கள்.

சபாநாயகரின் தீர்மானத்தை தொடர்ந்து ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமையின் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தெரிவுக்குழுவுக்கு நான் தலைமைத்துவம் வழங்குகிறேன். கடந்த நாட்களில் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் தெரிவுக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள்.

விசேடமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இலத்திரனியல் ஊடகத்தின் காலை பத்திரிகை வாசிப்பின் போது அந்த ஊடகவியலாளர் ஒரு சிறிய செய்திக்கு பெரியளவிலான விளக்கத்தை கொடுப்பது அவதானிக்கப்பட்டது.

காலை பத்திரிகை வாசிப்பு நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மோசடியாளர்கள், திருடர்கள், ஒழுக்கமற்றவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் செயற்படுகிறார். இதனால் சமூகத்தின் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெறுப்பு நிலை தோற்றம் பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருசிலர் முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள் ஏற்றுக் கொள்கிறோம். 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த ஒருசிலர் போன்றோரே என பத்திரிகை தம்பிகள் தொடர்ந்து தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து செல்கிறார்கள். இவ்விடயம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

ஒருசில ஊடகவியலாளர்களின் செயற்பாடு தவறு என்பதை அரசியல் கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இவர்களினால் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை கூட செல்ல முடியவில்லை. உனது தந்தை திருடன் தானே, திருட்டுத்தனமாக சிற்றுண்டிசாலையில் உணவு உண்கிறார் தானே என பிறர் குறிப்பிடுகிறார்கள். இந்த நிலையை ஊடகங்களே ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மதுசார போத்தலை வழங்கினால் ஊடகவியலாளர்கள் போலியான செய்தியை கூட அறிக்கையிடுவார்கள். பத்திரிகை ஸ்தாபனத்திலும்,உலக பத்திரிகை ஸ்தாபனத்திலும் பல வருட காலம் தலைவராகவும்,உப தலைவராகவும் பதவி வகித்துள்ளேன்.

ஆகவே ஊடகவியலாளர்கள் தொடர்பில் நன்கு அறிவேன். ஒருசில ஊடகவியலாளர்களை கணித்து ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும் தவறாக குறிப்பிடவில்லை. நாட்டின் ஜனநாயக இருப்புக்கு ஊடகம் முக்கியம் என்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு சார்பாக செயற்படுகிறோம்.

ஒருசில ஊடகங்கள் தமக்கு தேவையானவரை ஜனாதிபதியாக கொண்டு வருகிறது.அவர் ஊடாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு பின்னர் அவரை விரட்டியடிக்கின்றன.பின்னர் பிறிதொருவரை தமக்கு ஏற்றாட் போல் கொண்டு வருகின்றன.

ஒரு சில ஊடகங்கள் தாம் தான் பாராளுமன்றத்தையும், நாட்டையும் நிர்வகிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றன.

பிரதான நிலை பத்திரிகை ஒன்று நிதி மோசடி குற்றச்சாட்டில் தடுப்பு காவலில் உள்ள திலினி என்பவருக்கு சார்பாக எனது தரப்பினர் ஆஜராகுவதாக நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது.

நீதியமைச்சராக பதவி ஏற்றதன் பின்னர் எனக்கு என்று ஒருகுழுவினர் கூட இல்லை. எனது கனிஷ்ட வழக்கறிஞரகள் பெரும்பாலான நீதிமன்றங்களில் வழக்காடுகிறார்கள். எனது கனிஸ்ட வழக்கறிஞர்கள் ஒரு வழக்கிற்கு முன்னிலையாகும் போது அதற்கு நான் எவ்வாறு பொறுப்பு கூறுவது.

ஆகவே இது முற்றிலும் பொய்யானது செய்தியாகும். இது இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கும் குற்றமாகும்.

ஆகவே பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை குழுவுக்கு பிறிதொரு தலைவரை நியமித்து, இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்.பொய்யான செய்திகளுக்கு இடமளிக்க முடியாது என்றார்.