அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுகிறது

225 0

நான்கு உறுப்பினர்களை கொண்ட ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் பருப்பு,முட்டை,தேங்காய் ,சம்பல் ஆகிய உணவு பொருட்களை உள்ளடக்கிய உணவை பெற்றுக்கொள்ள குறைந்தபட்சம் 1220 ரூபாவை செலவிட வேண்டும்.

சமுர்த்தி செயற்திட்டம் ஊடாக நடுத்தர மக்கள் மலினப்படுத்தப்படுகிறார்கள். அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு  சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன சபையில் தெரிவித்தார்.

சமுர்த்தி கொடுப்பனவினால் சமூகத்தில் ஏழ்மை குறைவடைந்துள்ளது, மறுபுறம் சமுர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து செல்கிறது.

நாடளாவிய ரீதியில் 59777 பெருந்தோட்ட மக்கள் சமுர்த்தி கொடுப்பனவை பெறுகிறார்கள் என சமூக வலுப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அனுர பஸ்குவல் சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் புதன்கிழமை (19) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் தோட்டபுறங்களில் வாழும் குடும்பங்களில் தற்போது சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை யாது?, தோட்ட புறங்களில் வாழும் குடும்பகங்களுக்கு சமுர்த்தி  பயனை வழங்குவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, சமூக வலுப்படுத்தல் இராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டதாவது,

பெருந்தோட்ட பகுதிகளில் களுத்துறை மாவட்டத்தில் 5500 பேரும்,நுவரெலியா மாவட்டத்தில் 16003 பேரும்,காலி மாவட்டத்தில் 1035 பேரும்,கண்டி மாவட்டத்தில் 7491 பேரும்,பதுளை மாவட்டத்தில் 10597 பேரும்,இரத்தினபுரி மாவட்டத்தில் 9030 பேரும், கேகாலை மாவட்டத்தில் 4500 பேரூம்,மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 5617 பேரும் சமுர்த்தி கொடுப்பனவுகளை பெறுகின்றனர்.

இன,மத வேறுப்பாடு இல்லாமல் தகைமை அடிப்படையில் அரசியல் கட்சிகளினால் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுகிறது.நலன்புரி திட்டத்திற்கமைய தற்போது புதிய பயனாளர்களுக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.இதுவரை சுமார் 20 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.தகுதி அடிப்படையில் புதிய பயனாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, எதிர்வரும் வாரத்துடன் தோட்ட லயன் அறைகளுக்கு 200 ஆண்டுகள் நிறைவடைகின்றன.பெருந்தோட்ட பகுதிகளில் குறுகிய தரப்பினர் மாத்திரமே தற்போது தோட்ட தொழிற்துறையில் ஈடுப்படுகிறார்கள்.

1000 ரூபா ஒரு நாள் சம்பளம் பெரும்பாலான தோட்டங்களில் வழங்கப்படுவதில்லை.தற்போதைய வாழ்க்கை செலவுகளினால் தோட்டபுற மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நான்கு உறுப்பினர்களை கொண்ட ஒரு குடும்பம் முட்டை,தேங்காய் சம்பல் மற்றும் பருப்பு ஆகிய உணவு பொருட்களை கொண்டு மூன்று வேளை உணவையும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் ஒருநாளைக்கு 1220 ரூபாவை செலவிட வேண்டும்.நடுத்தர மக்களை மலினப்படுத்தி,தலை குனிய வைக்கும் வகையில் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.இதனால் பாரிய சமூக பிரச்சனை காணப்படுகிறது என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சமுர்த்தி  நிவாரணத்தினால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளார்கள்.மறுபுறம் சமுர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து செல்கிறது.

சமுர்த்தி பயன்பெறும் குடும்பங்களின் உறுப்பினர்களின் தொழிற்துறையை மேம்படுத்தும் வகையில் தொழிலமைச்சுடன் ஒன்றிணைந்து புதிய தொழிற்துறை பிரவேசம் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.