யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தப்பித்துக் கொள்வதற்காக அப்போதைய ஜனாதிபதி சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி இன்று பொறுப்புக் கூறலாக மாறியுள்ளது.
இலங்கை விவகாரத்தை மஹிந்த ராஜபக்ஷவே சர்வதே அரங்கிற்கு கொண்டு சென்றார் என எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) ஜெனிவா தீர்மானம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி விளக்கமளித்ததை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் முதற் கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல விவாதத்தை கோரினார்.
எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட புதிய பிரேரணை தொடர்பில் விவாதமொன்றை கோருகின்றோம். நாங்கள் கடந்த வருடத்தில் 11 வாக்குகளிலேயே தோல்வியடைந்தோம்.
இந்நிலையில் இம்முறை 6 வாக்குகளே கிடைத்துள்ளன. இதன்படி கடந்த வருடத்தை விடவும் இம்முறை படுதோல்வியடைந்துள்ளோம். முஸ்லிம் நாடுகள் எதுவும் இலங்கைக்கு வாக்களிக்கவில்லை.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தியவர்கள் யார்? யுத்தம் முடிவடைந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாங்கிமூன் இலங்கைக்கு வந்த போது வழங்கிய வாக்குறுதிகளே இப்போது கழுத்தை சுற்றியுள்ளது.
சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அந்த நேரத்தில் பிரச்சினையில் இருந்து தப்பிக்க மகிந்த ராஜபக்ஷ இணங்கினார். இதுதான் இப்போது பொறுப்பு கூறலாக மாறியுள்ளது. இதனால் இந்த விடயம் தொடர்பில் விவாதம் அவசியமாகும் என்றார்.

