மாணவர்கள் மீதான அராஜக நடவடிக்கைகளை ஜனாதிபதி நிறுத்தவேண்டும்

159 0

ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை சர்வதேசத்தின் நன்மதிப்பை இழப்பதற்கு வழிவகுக்கின்றது. அதனால் மாணவர்கள் மீதான அராஜக நடவடிக்கைகளை ஜனாதிபதி நிறுத்தவேண்டும். அத்துடன் நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால்  மக்களுக்கு முழுமையான சுதந்திரம்  வழங்கப்பட வேண்டும் என வேலுசாமி இராதாகிருஷ்ணன்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட 5 திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் உயில்கள் எழுதப்படும் போது பல்வேறு மோசடிகள் இடம் பெற்றுள்ளன. தகுதி இல்லாதவர்களே இவ்வாறான மோசடிகளில் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர். பல சட்டத்தரணிகள் பணம் சம்பாதிப்பதற்காகவே இதனைச் செய்வதைக் காண முடிகிறது. மாடி வீடுகளில்  வசிக்கும் மக்கள் தமது சொத்துக்கள் தொடர்பான இவ்வாறான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள செல்லும்போது இத்தகைய மோசடிகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

அத்துடன் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் சமூக சீர்கேடுகளுக்கு அது வழி வகுத்துள்ளது. அதனை பெரும்பாலானோர் தற்போது தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிகளில் உள்ளோர்,கல்வி அறிவு இல்லாதோர், ஆன்மீக தொடர்புகள் இல்லாதோர் இத்தகைய போதைப்பொருள் பாவனைகளில் அதிகம் ஈடுபாடு கொண்டுள்ளனர்.

மேலும் 14வயதுக்கு உட்டவர்களில் 19 சமவீதமானவர்கள் பாேதைப்பொருள் பாவனைக்கு ஆளாகி இருக்கின்றனர். அதில் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் இருப்பதாக  கணிப்புகளின் ஊடாக தெரிவிக்கப்படுகிறது.

இவற்றை தடுப்பதற்கு அரசாங்கம் முறையான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோன்று கஞ்சா பாவனையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. கஞ்சா ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலமாக பேசப்படும் நிலையில் அதை ஊக்குவிக்கக் கூடாது.

அத்துடன் சர்வதேசத்தின் நன்மதிப்பை இலக்கும் நிலையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. களனி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குலை சர்வதேச மன்னிப்புச்சபை எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக நாடுகளுடன் உதவிகளை பெற்றுக்கொள்ள கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் நிலையில் இவ்வாறான மாணவர்கள் மீதான அராஜக நடவடிக்கைகளை ஜனாதிபதி நிறுத்தவேண்டும் என்றார்.