மிருக உணவுக்காக கொண்டு செல்லப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி மாயம்

209 0

வத்தளை – எலகந்த பகுதி கலஞ்சியம் ஒன்றிலிருந்து, மிருக உணவுக்காக, முகத்துவாரத்தில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்ட அரிசியில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 17, 820 கிலோ நிறையுடைய அரிசி காணாமல் போயுள்ளமை தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முகத்துவாரம்  பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முகத்துவாரம் பொலிஸார் கூறினர்.

5 லொறிகளில் எடுத்து வரப்பட்டுள்ள  அரிசி,  முகத்துவாரத்தில் உள்ள பிரதான நிறுவனத்துக்குள் எடுத்துச் செல்ல முன்னர், நிறுவை மேடை ஒன்றூடாக  நிறுக்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த நிறுவனத்துக்குள் எடுத்துச் செல்லும் வரையில் சுமார் இரு மணி நேரம் வரை லொறிகள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளன.

அதன் பின்னர் குறித்த நிறுவனத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்ட போது, நிறுவனத்துக்குள் இருக்கும் நிறை மேடையில் மீள நிறை சரிபார்க்கப்பட்டுள்ளது.

இதன்போதே நிறை குறைவது அவதானிக்கப்பட்டு,  விநியோக நிறுவனத்தின் அதிகாரி ஒருவரால் இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந் நிலையிலேயே  எமுகத்துவாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்