சூதாட்ட நிலையம் ஒன்றினை சுற்றி வளைத்த போது கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றினை மீள வழங்குவதற்காக 5 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காக, அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையளித்து கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ( 18) தீர்ப்பளித்தது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபதிகே இந்த தீர்ப்பை அளித்ததுடன், 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார். இதனைவிட குற்றவாளி இலஞ்சமாக பெற்ற 5 ஆயிரம் ரூபாவையும் தண்டப்பணமாக மீள அறவீடு செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினரால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், அஹுங்கல்லை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் கே.பி. குமார பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே நீதிபதி, அவரை குற்றவாளியாக கண்டு குறித்த தண்டனையை அறிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அஹுங்கல்ல பிரதேசத்தில் சூதாட்ட நிலையம் ஒன்றினை சுற்றி வலைத்த போது கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசியை மீள ஒப்படைக்கவும், அதன்போது சிக்கிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருக்கவும் உப பொலிஸ் பரிசோதகர் 10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக கோரி அதில் 5 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவால் குற்றம் சட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

