வடக்கில் டெங்குநோயின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது, டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் திருத்தப்பட வேண்டிய வாய்க்கால்கள், குளங்கள், குட்டைகள், பாவனையில் இல்லாத கிணறுகள் போன்வற்றின் விபரங்களையும், அவற்றைச் சுத்தம் செய்வதற்கான இயந்திர விபரங்களையும் அறிக்கையாக வழங்குமாறு ஆளுநரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவற்றைச் சுத்தம் செய்வதற்குரிய இயந்திரங்கள், ஆளணிகளை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய சந்திப்பின்போது யாழ் மாநகர சபை ஆணையாளர், யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

