ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸை பதவியில் இருந்து நீக்கி தவிசாளர் பதவியை பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினருக்கு வழங்குமாறு ஆளும் தரப்பினர் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதற்கமைய எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டின் போது பதவி மறுசீரமைப்பு தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவிக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கட்சி கொள்கைக்கு முரணாக செயற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக ஒழுக்காறறு நடவடிக்கையை எடுத்து அவரை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திடம் வலியுறுத்தியுள்ளார்கள்.
தவிசாளர் பதவியை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருக்கு வழங்குமாறு கட்சியின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.அத்துடன் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் முக்கிய பதவி மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் உறுப்பினர்கள் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டின் போது முக்கிய பதவிகள் தொடர்பான அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

