திட்டமிட்ட வகையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரமாக்கப்பட்டுள்ளது

191 0

தான்தோன்றித்தனமான செயற்பாடுகளினாலும் முட்டாள்தனத்தினாலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பலவீனமடைந்தது. திட்டமிட்ட வகையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரமாக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண கொள்கை ரீதியான திட்டங்களை வெகுவிரைவில் முன்வைப்போம் என இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

மாத்தறை பகுதியில் சனிக்கிழமை (15) இடம்பெற்ற  மேலவை இலங்கை கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2019ஆம் ஆண்டு கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்து 2020 ஆம் ஆண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை உருவாக்கினார்கள்.மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய அரசாங்கம் செயற்படவில்லை.

தான்தோன்றித்தனம் மற்றும் முட்டாள்தனம் ஆகியவற்றினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பலவீனமடைந்தது.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதார கொள்கை குறித்து அவதானம் செலுத்தாமல் மாந்திரீகத்தில் அவதானம்  செலுத்திளார். அதன் இறுதி விளைவு பாரதூரமானதாக அமைந்தது.

அரசாங்கத்தின் தவறுகளை அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு சுட்டிக்காட்டினோம்.எமது ஆலோசனைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை.தவறுகளை பகிரங்கப்படுத்தியதால்  கூட்டணியின் பங்காளி கட்சியினர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

திட்டமிட்ட வகையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமையை மேற்குலக நாடுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறன.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் கொள்கை திட்டங்களை வெகுவிரைவில் வெளிப்படுத்துவோம்.இடதுசாரி அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து மேலவை இலங்கை கூட்டணியை பலப்படுத்துவோம் என்றார்.