84 சதவீத பெருந்தோட்ட மக்கள் பெரும் கடன் சுமைகளால் பாதிப்பு

195 0

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 60 சதவீதமானோரது தமது தனிப்பட்ட பாதுகாப்பானது சிறந்த நிலையில் இல்லை என்றும் , 22 சதவீதமானோர் தனிப்பட்ட பாதுகாப்பின்மையால் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பொருளாதார பாதிப்புக்களினால் 71 சதவீதமான விவசாயிகளும் , 84 சதவீதமான பெருந்தோட்ட மக்களும் கடன் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கையை வெளியிடும் நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு – கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது. இதன் போது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய – பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் அலெக்ஸான்டர் மெத்தீவ்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஆய்வு தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில் ,

இலங்கையின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு, கொழும்பு, கம்பஹா, அம்பாறை, கேகாலை, காலி, மொனராகலை, புத்தளம், நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய 11 மாவட்டங்களில் 2871 வீடுகளில் , வீடுகள் மட்ட மதிப்பாய்வு முன்னெடுக்கப்பட்டது. அதே போன்று நுவரெலியா மாவட்டத்தில் 11 தோட்டப்பகுதிகளில் 300 வீடுகளை அடிப்படையாகக் கொண்டும் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு முதியோர் மற்றும் இளைஞர் , யுவதிகளை அடிப்படையாகக் கொண்டு 6 மாவட்டங்களில் 4 என்ற அடிப்படையில் 24 சிறு கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டன. இவை தவிர தனிப்பட்ட ரீதியில் அரச உத்தியோகத்தர்கள் , அரச சாரா நிறுவனங்கள் அல்லது அமைப்புக்கள் , மின்பிடி தொழிற்துறை சார்ந்தோர் , பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என பல தரப்பினர் இந்த ஆய்வில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

எமது ஆய்வில் சில வரையறைகள் காணப்படுகின்றன. எனவே இந்த ஆய்வினை முழு இலங்கையையும் அடிப்படையாகக் கொண்டது எனக் கூற முடியாது. எமது ஆய்வு பிரதானமாக 11 மாவட்டங்களிலேயே முன்னெடுக்கப்பட்டது. 3 பிரதான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 6 வாரங்கள் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வழிமுறைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பவையே மேற்குறிப்பிடப்பட்ட 3 பிரதான காரணிகளாகும்.

உணவு மற்றும் வாழ்வாதார வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் 80 சதவீதமானோர் கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது , உணவைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். மீனவர்கள், விவசாயிகள், கர்பிணிகள் மற்றும் சிறுவர்கள் காணப்படுகின்ற குடும்பங்கள் இந்த பிரிவிற்குள் உள்ளடங்குகின்றனர்.

இதே வேளை இந்த பிரிவிலுள்ள 50 சதவீதமானோர் தாம் உணவில் மீன், இறைச்சி மற்றும் முட்டை என்பவற்றை எடுத்துக் கொள்வதை குறைத்துள்ளதாகவும் , 11 சதவீதமானோர் இவற்றை முழுமையாகத் தவிர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதே வேளை கடன் நிலைமை குறித்த ஆய்வில் 54 சதவீதமானோர் கடந்த ஜனவரியுடன் ஒப்பிடும் போது , தற்போது அதிக கடன் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதில் 71 சதவீதமானோர் விவசாயம் மற்றும் கடற்றொழிலாளர்கள் என்பதோடு , 84 சதவீதமானோர் பெருந்தோட்டத்துறையை சேர்ந்தவர்களாகவுள்ளனர்.

அடுத்து சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வில் இத்துறையில் 58 சதவீத வீழ்ச்சி காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலைமையால் கர்பிணிகள் மற்றும் மீனவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 30 சதவீதமானோர் தமக்கு தேவையான நேரத்தில் தேவையான சுகாதார சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாத நெருக்கடிகளுக்கு கடந்த 3 வாரங்களாக எதிர்நோக்கியுள்ளனர். இதில் இனங்காணப்பட்ட முக்கிய விடயம் யாதெனில் மருந்துகளின் விலைகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் பாரியளவில் அதிகரித்துள்ளமையாகும்.

வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெறும் போது மருத்துவர்கள் மருந்துகளை மருந்தகங்களில் பெறுவதற்கு பரிந்துரைக்கின்றனர். மருந்தகங்களில் மருந்துகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் , குறைந்த விலைகளிலுள்ள மருந்துகளைப் பெற்றுக்  கொள்ள அல்லது குறைவான அளவில் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள நோயாளர்கள் தாமாகவே தீர்மானித்துக் கொள்கின்றனர். இது பாரதூரமான சிக்கல் மிக்கதொரு விடயமாகும்.

இறுதியாக பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட ஆய்வில் 60 சதவீதமானோர் தமது தனிப்பட்ட பாதுகாப்பானது , கடந்த ஜனவரியுடன் ஒப்பிடும் போது சிறந்த நிலையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் 22 சதவீதமானோர் தனிப்பட்ட பாதுகாப்பின்மையால் தாம் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இவற்றுக்கு மேலதிகமாக தற்போது பாலியல் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளும் , வீட்டு வன்முறைகளும் அதிகரித்துள்ளன.

இதற்கு முன்னர் இவ்வாறான வன்முறைகள் பதிவாகும் போது சில சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். எனினும் தற்போது அந்த சேவைகளை தடையின்றி பெற்றுக் கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கக் காரணம் யாதெனில் , பொருளாதார நெருக்கடிகளால் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் தொழிலுக்குச் செல்லும் போது , பிள்ளைகள் தனித்து விடப்படுகின்றமையாகும்.

இதே வேளை 18 வயது பூர்த்தியடையாத பெண் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளல் அதிகரித்துள்ளதாக 51 சதவீதமானோர் குறிப்பிடுகின்றனர். எதிர்வரும் 3 – 6 மாதங்களுக்குள் இந்த பொருளாதார நெருக்கடிகள் தணியாவிட்டால் , 18 வயது பூர்த்தியடையாத பெண் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளும் வீதம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கல்வி ரீதியான ஆய்வில் 38 சதவீதமான சிறுவர்கள் முறையாகக் கல்வியைப் பெற்றுக் கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதேவேளை 60 சதவீதமானோர் கல்வியை இடைநிடுவில் கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 4 வாரங்களில் பெருந்தோட்டப் பகுதிகளில் 7 சதவீதமான மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர். இந்த ஆய்வு தொடர்பான முழுமையான அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.