சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நிலைமையை உணர்ந்துபேசவேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

262 0
தரித்திரம் பிடித்த சரித்திரத்தை உடையவர்கள் மக்களை திசைதிருப்பி அழைத்துச்செல்ல முயற்சிப்பதாக சொர்க்கத்திலிருந்து நேராக மட்டக்களப்பில் இறங்கி 2016ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அந்த அலையில் அள்ளுண்டு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இவருக்கு தமிழ் மக்களின் எண்பதாண்டுகால போராட்ட வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
பூமிக்கு வந்த பின்னராவது அல்லது மக்கள் பிரதிநிதியான பின்னராவது வரலாற்றுப் பாதையைத் தெரிந்துகொள்வதற்கு முயற்சித்திருந்தால் பரவாயில்லை. தமிழ் மக்களின் வீரஞ்செறிந்த போராட்ட காலத்தில் பல்வேறு வகையிலும் வருமானத்தைப் பெருக்கிக்கொண்டு வாழ்ந்த இவர் போன்றவர்களை மக்களின் நலன்சார்ந்து சிந்திக்கச் சொல்லிக் கேட்பது நியாயமில்லைதான். மக்களின் அழிவுகளைப் பற்றியும் அரசாங்கத்தின் அராஜகத்தைப் பற்றியும் எமது மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் பல்வேறு தரப்புக்கள் ஈடுபட்டிருந்ததைப் பற்றியும் அக்கறையின்றி இருந்துவிட்டு, அரசியலில் ஈடுபடுபவர்களிடமிருந்து இதைத்தவிர வேறெதை எதிர்பார்ப்பது?
இவரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்று அவர் குறைகூறுகின்ற கூட்டமைப்பின் ஏனைய கட்சித்தலைவர்களும் வந்திருந்தார்களே, அப்பொழுது ‘நீங்கள் பிரச்சாரம் செய்தால் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என்று சொல்லியிருக்கலாமே’, இந்த மானஸ்தர் ஏன் அன்று அவ்வாறு சொல்லவில்லை?
2015ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் அக்டோபர் வரை நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத்தில் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கி கால அவகாசம் பெற்றுக்கொடுத்தோமே, அப்பொழுது ஐ.நாவின் கண்காணிப்பு வேண்டும் என்று நீங்கள் ஏன் உங்கள் தலைவரைக் கேட்கவில்லை? இதை அன்று அனைவரும் வற்புறுத்தினோமே. அப்பொழுது நீங்கள் எங்கிருந்தீர்கள்? இப்பொழுது மீண்டும் கால அவகாசம் வழங்குவதற்கான ஒரு நிபந்தனையாக இந்தக் கருத்தை வைப்பதன் நோக்கமென்ன? உங்களுக்கு இதிலுள்ள சூட்சுமம் தெரியுமா?
ஐ.நா.வின் பிரகடனத்திற்கு இலங்கை அரசும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. அதில் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. அவற்றில் எவை நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பட்டியலிடுவதற்கு நீங்கள் தயாரா?
காணிகள் விடுவிக்கப்படவேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஐ.நா. கோரியிருந்தது. இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது. இதுதொடர்பில் நீங்களோ அல்லது உங்களது தலைவரோ எத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டீர்கள் என்று கூற முடியுமா?
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? என்பதைக் கண்டறிந்துகொள்ளவும், தங்களிடமிருந்து அடாத்தாகப் பறிக்கப்பட்ட காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வடக்கு கிழக்கு மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கிவிட்டனர். இதில் உங்களது வழிகாட்டல்களும் பங்களிப்புகளும் எந்தளவிற்கு இருந்தன என்பதைத் தெரிவிக்க முடியுமா? தமிழ் மக்களின் உரிமைக்காக அரசாங்கத்தை எதிர்த்து நீங்கள் எத்தனை ஜனநாயக போராட்டத்தை தலைமையேற்று நடத்தி உள்ளீர்கள்? மாறாக இணக்க அரசியலை தானே உங்களால் பேசவும் செய்யவும் முடிகின்றது.
பாடசாலைகளிலும் முன்பள்ளிகளிலும் அரசியல் கருத்துக்களைப் பேசும் நீங்கள் என்றாவது மக்கள் போராட்டங்களை தலைமையேற்று நடத்தி அதில் அரசுக்கு எதிராக கருத்துகளை கூறமுடியுமா? ஏதோ மல்லார்ந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பிவிட்டீர்கள். அது உங்கள்மீது விழுவதை யாராலும் தடுக்கமுடியாது.
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காகவும், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகங்களுக்கு எமது இன்றைய நிலையை நேரடியாகத் தெரிவிக்கும்பொருட்டுமே வடக்கிலும் கிழக்கிலும் எழுக தமிழ் பேரணி நடத்தப்பட்டது. இதை எமது தாயகப் பிரதேசத்தில் வாழ்கின்ற சிறுபிள்ளைகூட அறியும்.
யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் நடைபெற்ற சூழலும் மட்டக்களப்பில் நடைபெற்ற சூழலும் வித்தியாசமானது. மக்கள் பிரதிநிதிகளான உங்களால் எதுவும் செய்யமுடியாத கையறுநிலையை உணர்ந்துகொண்ட மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தாங்களே வீதியில் இறங்கி நியாயம் கேட்கத் தொடங்கிவிட்ட தருணத்திலேயே மட்டக்களப்பு பேரணி நடைபெற்றது.
மக்கள் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியவர்கள் நீங்களும் உங்களைப் போன்ற பிரதிநிதிகளும்தான் என்பதை என்றாவது மனச்சாட்சியுடன் சிந்தித்ததுண்டா? அவ்வாறு சிந்தித்திருந்தால் நீங்கள் அவர்களுடன் இணைந்து அவர்களை வழிநடத்தி இருப்பீர்கள். இப்படி எதிர்கருத்து வரமுடியாத இடத்தில் பேசியிருக்க மாட்டீர்கள்.
பேரணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் நீங்கள் வெளியிட்ட கருத்துக்களை தயவு செய்து மீண்டும் ஒருமுறை மீட்டிப்பாருங்கள். இப்பொழுது நீங்கள் பேரணி குறித்து வெளியிட்ட கருத்துக்கும் அன்று நீங்கள் வெளியிட்ட கருத்துக்கும் உள்ள முரண்பாடுகளை உணர்வீர்கள். நீங்கள் வேண்டுமானால் உங்களது கருத்தை மறந்திருக்கலாம். ஆனால் மக்கள் உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களை மிகவும் ஆழமாக அவதானித்து வருகின்றனர்.
எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் எவ்வளவு உணர்வுபூர்வமாக வந்திருந்தனர் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் மற்றொரு சம்பவத்தையும் அறிந்திருப்பது நல்லது. பேரணியில் கலந்துகொண்ட மக்களுக்கு வீதியில் இருமருங்கிலும் உள்ள மக்கள் கோயில் திருவிழா நேரங்களில் தாகசாந்தி அளிப்பதுபோன்று நீர்கொண்டுவந்து கொடுத்தார்கள். வீடுகளிலிருந்து வெளியில் வந்து முழக்கங்களைக்கூட எழுப்பினார்கள். இது மட்டக்களப்பு மக்களின் இயல்பு. இந்த மக்கள் எழுச்சி போராட்டத்திலிருந்து அன்னியப்பட்ட உங்களால் இவற்றையெல்லாம் புரிந்துகொள்வது கடினம்.
இறுதியாக ஒன்றைமட்டும் சொல்கிறோம். கடந்த 2015ஆம் ஆண்டு கூட்டமைப்பின் பேச்சாளர் அவர்கள் ஜெனிவாவிலிருந்து நியூயோர்க் சென்று தீர்மானத்தின் நகல்வரைவு தொடர்பாக இதிலிருந்து கீழிறங்கிவிடாதீர்கள். இதற்கும் குறைவான தீர்மானமாக இருந்தால் எமது மக்களிடம் எடுத்துச் சொல்வது கடினம் என்று கூறியதாக ஊடகங்களில் வந்த செய்தியை நீங்களும் படித்திருப்பீர்கள். வடக்கு கிழக்கில் கூட்டமைப்பின் பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாற்பத்து ஒன்று மாகாணசபை உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கான உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட பலமான ஒரு அரசியல் சக்தியான நாம் எமக்கு என்ன வேண்டும் என்பதை வலிமையுடன் கேட்பதைவிடுத்து மேற்கண்டவாறு கூறியது உரிமை அரசியலா? தரகு அரசியலா?
தரகு அரசியலிலிருந்து விடுபட்டு, மக்களிடம் ஆணைகேட்ட அந்த உரிமை அரசியலை முன்னெடுப்பதற்கு இன்றைய தலைமை தவறிவிட்டது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
உரிமை அரசியலிலிருந்து தரகு அரசியலை நோக்கி வழிநடத்துபவர்கள் திசைதிருப்புகிறார்களா? அல்லது உரிமை அரசியலை முன்னிலைப்படுத்துபவர்கள் திசைதிருப்புகிறார்களா? இந்தக் கேள்விக்கு மக்கள் மன்றத்திலிருந்து உங்களுக்கு பதில் கிடைக்கும். இதை நாம் மக்களிடமே விட்டுவிடுகிறோம். இனியாவது சிந்தித்து கருத்துக்களை வெளியிடுங்கள்.