நுவரெலியா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

641 0

நுவரெலியா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று நேற்று மாலை (15.02.2017) 4.00 மணியளவில் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க தலைமையில் அவருடைய அமைச்சில் இடம்பெற்றறுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் நுவரெலியாவை சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டு தமது பிரச்சினைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், விவசாய அமைச்சின் அதிகாரிகள், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுசில் சான்த உட்பட அவருடைய குழுவினர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கடந்த பல மாதங்களாக தமது விவசாய பயிர்களை அறுவடை செய்கின்ற போது அவற்றுக்கான உரிய விலை கிடைப்பதில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பொருளதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது கவனத்திற்கு கொண்டுவந்தனர். எனவே இந்த விடயம் தொடர்பாக நேரடியாக விவசாயத்துறை அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தை ஒன்றை விவசாயத்துறை அமைச்சில் ஏற்பாடு செய்திருந்தேன்.

இந்த பேச்சுவார்த்தை விவசாயத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட நுவரெலியாவை பிரதிநிதித்துவம் செய்கின்ற விவசாயிகள் தாம் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம் என்பது தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

குறிப்பாக தற்பொழுது இலங்கைக்கு இறக்குமதி செய்கின்ற மரக்கறி விதைகளை தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்ற போது அமைச்சு அது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் தனியார் நிறுவனங்கள் அவர்களுடைய இலாபத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு அளவிற்கு அதிகமான விதைகளை இறக்குமதி செய்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் நுவரெலியா தவிர்ந்த வெளி மாவட்டங்களில் நுவரெலியாவில் பயிரிடப்படுகின்ற அதே பயிர்கள் பயிரிடப்படுவதால் நுவரெலியா விவசாயிகள் தமது பயிர்களுக்கு அறுவடையின் போது உரிய விலை கிடைக்காமல் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர். இது போன்ற பல விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதற்கு பதிலளித்த விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இதற்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். எனவே இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகள் மற்றும் எமது அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் ஒரு கலந்துரையாடலை உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதே போல இந்த பேச்சுவார்த்தை மிக விரைவில் நடைபெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். எனவே நுவரெலியா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை எதிர்காலத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.