யுத்தம் முடிவுக்கு வந்து பல வருடங்கள் கடந்தும் கூட வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகள் இன்னும் விடுவிக்கப்படாதிருப்பதானது தேசிய நல்லிணக்கத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் இம்முறை குறைக்கப்பட்டுள்ளதால் கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைககளை அபிவிருத்து செய்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் புதன்கிழமை (15) திருகோணமலையில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதன் மூலமே அரசாங்கம், சிறுபான்மையினரின் நம்பிக்கையை வெற்றி கொள்ள முடியும் எனவும் அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக சிறுபான்மையினரின் அபிலாஷைகள் மற்றும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுத்தக் கூடிய தீர்வுகள் முன்வைக்கப்படுவதன் ஊடாகவே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனவும் இதன்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு முதலமைச்சர் விளக்கிக் கூறினார்.
மேலும், கிழக்கு மாகாண கல்வித்துறையை மேம்படுத்துவதற்கான உதவி நிகழ்ச்சித் திட்டமொன்றை பிரித்தானிய உருவாக்கித்தர முன்வர வேண்டும் என முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் குறைக்கப்பட்டுள்ளதால் கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைககளை அபிவிருத்து செய்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ள சூழ்நிலையில், நாம் கோரும் உத்தேச திட்டத்தின் மூலம் தற்போது பௌதீக வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கும் கிழக்கு மாகாணத்தின் பின்தங்கிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கும் பிரித்தானியா பாரிய பங்களிப்பை வழங்க முடியும் என எடுத்துக்கூறப்பட்டது.
இதேவேளை கிழக்கின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் இங்கு பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்குமான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாண அமைச்சர்களான ஏ.எல்.எம் நசீர், ஆரியவதி கலப்பதி, முதலமைச்சரின் செயலாளர் யூ.ஏ.எல் அஸீஸ் உட்பட பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

