ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை துண்டாக்கவேண்டும், உடைக்கவேண்டும் என்று மறைமுகமாக இந்த நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் ஊடுறுவியுள்ள வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் உடைப்பதற்கு சதிகள் நடைபெறுகின்றதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் இரு சமூகங்களில் குரல்களும் பலப்படுத்தப்பட்டு அரசியல் உரிமையைப் பெறுவதற்காக ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தும்பங்கேணியில் அமைக்கப்பட்டுள்ள அரச ஆடு மரபுரிமை மேம்பாட்டு நிலையம் மற்றும் ஆடு உற்பத்தி பண்ணை என்பவற்றின் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
கிழக்கு மாகாண விவசாய, கால்நடைகள் அபிவிருத்தி அமைச்சர் கி. துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,
இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தியதன் பின்னர் ஒரு வருடம் மட்டும் கிழக்கு மாகாணச பைக்கு கொஞ்சம் அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. 2017ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டில் மீண்டும் பழைய நிலைமை ஏற்பட்டுள்ளது. நிதியொதுக்கீடானது அரைவாசியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற கோசத்திற்கு பெரும்பான்மை மக்கள் உட்பட அனைத்து இன மக்களும் வாக்களித்திருந்தனர். வெறுமனே சிறுபான்மை சமூகம் மட்டும் வாக்களிக்கவில்லை. அந்த பொறுப்பை இந்த அரசாங்கம் நிறைவேற்றுகின்றதா என்ற கேள்வி எங்களுக்கள் எழுகின்றது.
அரசியல் அதிகாரத்தை தருவதற்கு பதிலாக இருக்கும் அதிகாரம் பறிக்கப்படுகின்றதா என்று நினைக்கும் அளவுக்கு நடவடிக்ககைள் மாற்றமடைந்துள்ளன. திவிநெகும சட்டத்திற்கு பின்னர் விசேட அபிவிருத்தி சட்ட மூலம் கொண்டு வரப்படுகின்றது எங்களது அதிகாரங்களை பறிப்பதற்காக. அதேபோன்று பல்வேறு சட்ட மூலங்கள் மாகாணங்களின் அதிகாரங்களை பறிப்பதற்காக கொண்டு வரப்படுகின்றன.
இந்த நாட்டில் இன்று நான்கு பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்துள்ளனர். ஒருபோதும் இந்த நாட்டில் ஒன்றிணைய மாட்டார்கள் என்று கூறப்பட்ட ஐ.தே.க.தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் ஒன்றிணைந்துள்ள வேளையில், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஹுப் ஹக்கீம் ஆகிய நான்கு தலைமைகளும் ஜனநாயக வழியில் தீர்வு காண வேண்டும் என உளப்பூர்வமாக ஒன்றிணைந்துள்ள இந்த காலத்தில் தீர்வு எட்டப்படவில்லையென்றால் எப்போது எட்டப்படும் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் உள்ளது.
இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் திட்டமிட்டு நசுக்கப்பட்ட வரலாறு இருந்து வருகின்றது. அவற்றுக்கு அவற்றுக்கு முற்றுபுள்ளி வைக்காமல் சிறுபான்மை கட்சிகளை உடைப்பதற்கான சதி நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த காலகட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து செல்ல வேண்டிய தேவை இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
ஒன்றுபட்ட குரலில் நாங்கள் ஒலிக்கும்போது இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் பலமிக்க ஒரு சக்தியாகவும், இந்த நாட்டில் நிரந்தரமான ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்கான ஒரு குரலாக அந்த குரலாகவும் அமையும்.
இரா. சம்பந்தன் ஐயாவின் காலத்தில் தீர்வு எட்டப்பட வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது. தீர்வு இழுத்தடிக்கப்படாமல் சரியான தீர்வாக உடனடியாக வழங்க வேண்டிய பொறுப்பு, அனைவரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்கின்றது என்றார்.

