கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட மாயாஜால உலகமிது !

168 0

மிக்கி மவுஸ், ஸ்னோவைட், பினோக்கியோ,பீட்டர்பேன், சிண்ட்ரெல்லா, தி ஜங்கள் புக், டோய் ஸ்டோரி, அலாதீன், தி லயன் கிங், இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் பெயர்களை தெரியாமல் சிறியவர்களும் இல்லை. இவற்றை பார்க்காமல் குழந்தைப் பருவத்தை கடந்து வந்த பெரியவர்களும் இல்லை. கார்ட்டூன்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? நமது கனவுலகில் வாழும் கதாபாத்திரங்களை நம் கண்முன்னே கொண்டுவரும்போது அதைப் பார்த்து ரசித்து மகிழவைப்பது கார்ட்டூன்கள் தான்.

கார்ட்டூன்களோடு சேர்ந்து ஜேக்ஸ்பேரோ, ஐயன் மேன், ஹல்க்,கேப்டன் அமெரிக்கா இப்படி சூப்பர் ஹீரோக்களை எல்லாம் அறிமுகப்படுத்தி இன்று உலகம் முழுவதும் அனைவர் மனதிலும் பதியப்பட்ட பெயராகிவிட்டது டிஸ்னி. அப்படிபட்ட டிஸ்னி உலகம் நிஜத்தில் இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட அந்த மாயாஜால டிஸ்னி உலகத்திற்கு நான் உங்களை அழைத்துச் செல்கிறேன். அனைவரும் தயாரா?

டிஸ்னி உலகை நோக்கி நம் முதல் பயணத்தை இங்கிருந்தே ஆரம்பித்துவிட்டோம். இந்த பயணத்தில் நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது வோல்ட் டிஸ்னி என்ற பெயருக்கு பின்னால் உள்ள வெற்றிச் சரித்திரத்தை தான்.

கற்பனையான உருவங்களுக்கு உயிர்கொடுத்து கார்ட்டூன் கதாபாத்திரங்கள் எல்லாம் உண்மையாகவே இருக்கின்றன போன்றதொரு உணர்வை ஏற்படுத்தி நம் குழந்தைப் பருவத்தை கனவுலகிற்கே அழைத்துச்சென்று ரசிக்க வைத்த சிரிக்க வைத்த அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்கியவர் தான் வோல்ட் டிஸ்னி. அவருடைய பெயர் தான் இன்று உலகறிந்த வோல்ட் டிஸ்னி நிறுவனத்தின் பெயராகிவிட்டது. இவரைப் பற்றி தெரியாமல் வோல்ட் டிஸ்னி கார்ட்டூன்களையும், திரைப்படங்களையும் நாம் கடந்து விட முடியாது. இத்தனை பெரிய சரித்திர வெற்றிக்குப் பின்னால் அவருடைய கஷ்டங்கள்,தோல்விகளால் கறைபடிந்த கடந்தாலம் நீண்டு இருக்கிறது. அதனால் வோல்ட் டிஸ்னியின் வாழ்க்கை வரலாறை சிறு பயணத்திற்குள் அடக்கிவிடமுடியாது. என்றாலும் வோல்ட் டிஸ்னி பற்றி அறிந்துகொள்ளாமல் அடுத்த கட்டத்திற்கு நாம் நகர முடியாது என்பதற்காக அவரை பற்றி அறிந்துகொள்வோம்!

வோல்ட் டிஸ்னி

1901 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி அமெரிக்காவில் சிகாகோவில் பிறந்தார் வால்ட் டிஸ்னி. சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதிலும், வர்ணம் தீட்டுவதிலும் தான் அவருக்கு ஆர்வம் அதிகம். பள்ளிப்பாடங்களை படிப்பதற்கு பதிலாக எப்போதுமே இயற்கை காட்சிகளையும், விலங்குகளையும் வரைந்துகொண்டிருப்பார். டிஸ்னி பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர்களுக்கும் நண்பர்களுக்கும்  கரும்பலகையில் ஓவியங்களாக வரைந்துகொண்டே கதை சொல்லுவார்.

ஓவியங்களில் ஆர்வம் இருந்தாலும் வீட்டின் குடும்ப கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள தன் தந்தையுடன் பத்திரிகை விநியோகிக்கும் வேலைக்கு சென்றார். இப்படியிருக்க டிஸ்னி தான் பயின்ற கார்ட்டூன் முறையைப் பயன்படுத்தி செய்தித்தாள்களில் ‘கார்ட்டூனிஸ்ட்’ பணிக்காக பல்வேறு வழிகளில் முயற்சித்தும் தோல்வியையே சந்தித்தார். முதலாம் உலகப்போர் நடந்தவேளை அமெரிக்கச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக சிலகாலம் வேலைசெய்தார். பிறகு, ஆர்ட் ஸ்டுடியோ ஒன்றில் வர்ணனையாளராகப் பணிக்குச் சேர்ந்தார்.

தன்னுடைய திறமைக்கும், உழைப்புக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்காததல் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு  தன் சகோதரர் ராயுடன் இணைந்து தன்னுடைய 21 ஆவது வயதில் சிறியளவில் Laugh-O-Gram  எனும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

கேலிச்சித்திர படங்களை உருவாக்குவதில் சோதனை செய்து பார்த்த அவர் Alice in Cartoon Land என்ற கார்ட்டூன் படத்தை தயாரித்தார். அது தோல்வியைத் தழுவியதால் நிறுவனமும் ஸ்தம்பித்து போனது. ஆனாலும் மனம் தளராத வால்ட் டிஸ்னி அடுத்து Oswald the Lucky Rabbit என்ற புதிய கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். ஓரளவு வரவேற்பை பெற்றாலும் அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றினார். அப்போதும் அசராத டிஸ்னி தன் சகோதரர் ராயுடன் இனிமேல் நாம் சொந்தமாக தொழில் செய்வோம் நமக்கு கைகொடுக்கப் போவது ஓர் எலி என்று எடுத்துரைத்தார். அந்தவொரு எலிதான் இன்று உலகப் புகழ் மிக்கி மௌஸ் ஆக உருவாகியுள்ளது.

மிக்கி மௌஸ்


டிஸ்னிக்கு சார்லி சாப்ளினைத் தான் மிகவும் பிடிக்கும். பேசாமலேயே இந்த உலகை சிரிக்க வைத்த சார்லி சாப்ளினுக்கு அடுத்து கார்ட்டூன் உருவத்தால் இந்த உலகையே சிரிக்க வைத்த கதாபாத்திரம் தான் மிக்கி மவுஸ். பிறந்த ஓரிரண்டு ஆண்டுகளிலேயே உலகப்புகழ் கார்ட்டூன் கதாநாயகனாகிவிட்டது. அதுமட்டுமன்றி உலகிலேயே முதல் முதல்  ஒலிகளை இணைத்த Motion Picture அனிமேடட் கார்ட்டூனும் இதுதான்;. மிக்கிக்கு உருவம் தந்த டிஸ்னியே அதற்கு குரலும் கொடுத்தார். அவர் அடுத்தடுத்து தயாரித்த steamboat Willie, The skeleton Dance போன்ற கேலிச்சித்திரங்களில் மிக்கி அடித்த லூட்டிகளையும் அதன் சேட்டைகளையும் இன்றும் மறக்கமுடியாது. பார்த்தாலே சிரிக்கவைக்கும் அதன் குறும்பகள் அப்படி.

 

 

 

 

 

 

‘வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம்? என்று தெரியாமல், ஒரு பிடிப்பு இல்லாமல் எல்லாமே இழந்த நிலையில் ஒருமுறை Manhattan -லிருந்து Hollywood- இற்கு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எப்போதும் போலவே அப்போதும் நான் கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் ஓவிய நோட்டுப்புத்தகத்தில் நான் கிறுக்கிய கதாபாத்திரம்தான் மிக்கி மவுஸ்.’ என்றார் டிஸ்னி. மிக்கியின் வெற்றியைத் தொடர்ந்து, டொனால்டு டக், கூஃபி போன்ற கதாபாத்திரங்களையும் உருவாக்கினர்.

1937 ஆம் ஆண்டு, முழுநீளத் திரைப்படம் ஒன்றை எடுக்க திட்டம் தீட்டிய டிஸ்னி, Snow White and The Seven Dwarfs எனும் Fairy Tale கதையைப் படமாகவும் எடுத்தார். இதன்மூலம் குறும்படமாக இருந்த அனிமேஷன் கார்ட்டூன்கள் முழுநீளத் திரைப்படமானது. இப்படிதான் அவருடைய மிக்கி மவுஸ் கார்ட்டூனிலிருந்து கடந்தகாலம் வரையிலான அவருடைய பயணம் நகர்ந்தது.

நம்முடைய பயணமும் நகர்ந்துக்கொண்டிருக்கிறது. நெருங்கிவிட்டோம். இதோ! அந்த பிரம்மாண்ட டிஸ்னிலேண்ட்.

டிஸ்னிலேண்ட் 

டிஸ்னிலேண்ட் மாயாஜாலங்களின் தாயகம்.வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று பார்க்கவேண்டுமென்ற ஒரு ஏக்கத்தின் பட்டியலில் நிச்சயம் டிஸ்னிலேண்ட் இற்கு இடமுண்டு. வோல்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்களைப் பார்க்கும் ஒவ்வொருவருக்குமே டிஸ்னிலேன்ட் பற்றி தெரிந்திருக்கும்.  வோல்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்களின் ஆரம்பத்தில்  ஒரு வான் நட்சத்திரத்திலிருந்து ஆரம்பித்து கொடிகட்டி பறக்கும் பிரம்மாண்டமான கோட்டையோடு வான வேடிக்கைகளோடு காட்டப்படும்  Intro  வோல்ட் டிஸ்னியின் கற்பனை சித்தரிப்பு தான்.

ஆனால்  இந்த கற்பனை சித்தரிப்பை நிஜமான மாயாஜால உலகமாக பிரம்மாண்டமாய் மாற்ற டிஸ்னியால் உருவாக்கப்பட்டதே டிஸ்னிலேன்ட்

welcome to the dinsey Land!

திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை கார்ட்டூன் உலகத்தை  ஏன் நிஜமாக்க கூடாது என்ற எண்ணத்தோடு 1955 ஆம் ஆண்டில் 17 மில்லியன் டொலர் செலவில் மிகப்பிரமாண்டமான ‘Disney Land Park’ என்ற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவின் Anaheim  நகரில் உருவாக்கினார் டிஸ்னி. திறக்கப்பட்ட முதல் நாள் சுமார் 15,000 பேர் வருவார்கள் எனக் கணக்கிடப்பட்டு அப்போது நுழைவுச் சீட்டு ஒரு டாலராக இருந்தது. ஆனால் முதல் நாளே, 30,000 பேர் வந்து பூங்காவிற்கு வந்ததோடு 90 மில்லியன் மக்கள் வீட்டில் இருந்தபடி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தனர். நுழைவு டிக்கெட் இப்போது கடவுச்சீட்டு முறைமையை பின்பற்றும் வரை மிகப் பெரிய வளர்ச்சியடைந்துவிட்டது.

 

 

 

‘ The Happiest Place On Earth’ மற்றும் ‘கனவுகள் நனவாகும்’ இடம் என்றெல்லாம்  வர்ணிக்கப்படும் டிஸ்னி லேண்ட் பூங்கா ஆரம்பிக்கப்பட்ட 25 ஆண்டுகளில் பல உலகத்தலைவர்கள் உட்பட 200 மில்லியன் மக்களை ரசிக்க வைத்துள்ளது. உலகின் 6 இடங்களில் டிஸ்னி லேண்ட் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைந்துள்ளன. டிஸ்னிலாண்ட் பூங்காவில் மொத்தம் எட்டு தீம்களில் தனித்தனி இடங்கள் இருக்கின்றன.  மிக்கி டூன்டவுன், கிரிட்டார் கண்ட்ரி,அட்வஞ்சர் லாண்ட்,மெயின் ஸ்ட்ரீட், யு.எஸ்.எ, ஃபாண்டஸி லாண்ட்,  ஃபிராண்டியர் லாண்ட்,நியூ ஓர்லியன்ஸ் ஸ்குயர் போன்றவையே அந்த எட்டு தீம்கள் ஆகும். அதில் வெவ்வேறு வகையான விளையாட்டுகள், வியப்பளிக்கும் நிகழ்வுகள், உல்லாச ஹொட்டல்கள் என எக்கச்சக்கமான பொழுதுபோக்கு அம்சங்கள் குவிந்து கிடக்கின்றன.

வோல்ட் டிஸ்னியின்    வெற்றிச் சரித்திரமும்    அவரின்   பிரம்மாண்ட   டிஸ்னி வேர்ல்டும் காலத்தால்    அழியாத    சின்னங்களே…!