ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிபந்தனைகளை ஜனாதிபதி இரகசியமாக நிறைவேற்றுவார்

134 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிபந்தனைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரகசியமான முறையிலாவது நிறைவேற்றுவார்.

இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதத்தை கோரவுள்ளோம். ஜெனிவா விவகாரத்தில் ஜனாதிபதியின்  வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  கூட்டத்தொடர் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் கொண்டு வரப்பட்டு,அவை நிறைவேற்றப்பட்டுள்ள,இதனால் எவ்வித பயனும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.

தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களுக்கான அபிவிருத்திகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டால் அரசியல் தீர்விற்கான மதிப்பு இல்லாமல் போய்விடும் என குறிப்பிடும் தமிழ் தலைமைகள் அரசியல் வரபிரசாதங்களை முழுமையாக பெற்றுக்கொண்டு சுகபோகமாக வாழ்கிறார்கள்.

தற்போதைய நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு அரசியல் தீர்வை காட்டிலும்,அபிவிருத்தியே முக்கியமானது.பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை முன்னிலைப்படுத்தி தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்து அரசியல் பயனை பெற்றுக்கொள்கிறார்கள்.

வழமை போல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வருடாந்த கூட்டத்தொடர் இவ்வருடமும் இடம்பெறுகிறது.ஜனாதிபதி ரணில் விக்கிரசமசிங்க அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே செயற்படுவார்.இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படும் நிபந்தனைகளை ஜனாதிபதி இரகசியமான முறையிலாவது நிறைவேற்றுவார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் திகன வன்முறை சம்பவத்தில் அனைத்து தரப்பினரின் அவதானமும் வன்முறை மீது காணப்பட்ட நிலையில் அவர் காணாமல் போனோர் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றினார். தற்போதும் அவர் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள் அறிக்கை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பாராளுமன்ற விவாதத்தை கோரவுள்ளோம்.ஜெனிவா விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்றார்.