ஐ.நா.வில் 6 ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்புக்கு வருகிறது

98 0

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை மேலும் வலுப்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு, அவர்களுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கத்தின்கீழ் வழக்குத்தொடரக்கூடியவகையில் கோப்புகள் தயார்நிலையில் வைக்கப்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் சாராம்சம் வாசிக்கப்பட்டு, அதுகுறித்த விவாதமும் இடம்பெற்றது.

அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இணைந்து ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் தயாரித்துள்ள புதிய பிரேரணை வரைபு கடந்த செப்டெம்பர்மாத நடுப்பகுதியில் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தது.

அதன்பின்னர் அப்பிரேரணை வரைபு குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் தர்க்கங்களைத் தொடர்ந்து திருத்தங்களுடன்கூடிய 2 ஆவது வரைபு வெளியிடப்பட்டு, அதன் இறுதி வரைபு கடந்த மாதம் 21 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இப்புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பை எதிர்வரும் வியாழக்கிழமை (6 ஆம் திகதி) நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள இப்புதிய பிரேரணை வரைபு குறிப்பிட்டுக்கூறத்தக்களவிற்கு வலுவானதாக இல்லை என்றும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தப்படாமை அதன் பிரதான குறைபாடென்றும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இருப்பினும் ஏற்கனவே இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத்திரட்டும் பொறிமுறை மேலும் வலுப்படுத்தப்படவேண்டுமென இப்புதிய பிரேரணை வரைபில் வலியுறுத்தப்பட்டுள்ளமையை வரவேற்கத்தக்க விடயமெனக் குறிப்பிட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், இதனூடாக போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு, அவர்களுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கத்தின்கீழ் வழக்குத்தொடரக்கூடியவகையில் கோப்புகள் தயார்நிலையில் வைக்கப்படும் என்று சுட்டிக்காட்டினார். அதன்மூலம் இலங்கையின் போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கத்தின்கீழ் வழக்குத்தொடர்வதற்கும், விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் ஏதேனுமொரு நாடு விரும்பும்பட்சத்தில், அந்நாடு மேற்குறிப்பிட்டவாறு தயார்நிலையில் இருக்கும் ஆதாரங்கள் அடங்கிய கோப்புகளைப் பயன்படுத்தமுடியும் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

‘சர்வதேச நியாயாதிக்கம்’ என்பது தேசிய ரீதியான சட்டவரம்பிற்கு அப்பாற்பட்டு, சில நாடுகளில் அமுலில் இருக்கின்ற சர்வதேச ரீதியான சட்டவரம்பெல்லையாகும். அந்நாடுகள் ஏதேனுமொரு வெளிநாட்டில் போர்க்குற்றங்களிலோ அல்லது மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களிலோ ஈடுபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கக்கூடிய ஒருவர் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கும் பட்சத்தில், அவருக்கு எதிராக வழக்குத்தொடர்வதற்கும் விசாரணைகளை மேற்கொள்வதற்குமான அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை நிறைவேறும்பட்சத்தில், அது பெரும்பாலும் 51/1 தீர்மானம் என்ற பெயரில் அழைக்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கும்பட்சத்தில் அதுகுறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாகப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு, அவசியமான ஒத்துழைப்புக்கள் இலங்கைக்கு வழங்கப்படும்.

அதன்தொடர்ச்சியாக அத்தீர்மானம் குறித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை எதிர்வரும் 2023 ஜுன் மாதமும், ஆரம்பகட்ட எழுத்துமூல அறிக்கை 2023 செப்டெம்பர் மாதமும், 2 ஆம் கட்ட வாய்மொழிமூல அறிக்கை 2024 மார்ச் மாதமும், முழுமையான இறுதி அறிக்கை 2024 செப்டெம்பர் மாதமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும்.

இதுஇவ்வாறிருக்க அடுத்தகட்டமாக உலகளாவிய நியாயாதிக்கத்தைப் பயன்படுத்துமாறு தாம் உறுப்புநாடுகளிடம் வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதென்பது கடினமானதொரு செயன்முறையாக இருந்தாலும், அதற்குரிய ஆரம்பகட்ட நகர்வுகளை முன்னெடுக்குமாறு மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கோரியிருப்பதாகவும் தெரிவித்தார்.