பாகிஸ்தானில் வெடிகுண்டை செயலிழக்க முயற்சித்தபோது அது வெடித்தது. அந்த சம்பவத்தில் வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானில் லாகூர் நகரில் நேற்று முன்தினம் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டி வந்து வெடிக்க செய்தார். இந்த சம்பவத்தில் 16 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.இதற்கிடையே குவெட்டா நகரில் சர்யாப் பாலம் அருகே சாலையோரம் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அந்த வெடிகுண்டை எடுத்து செயலிழக்க செய்யும் முயற்சியை மேற்கொண்டனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் செயலிழப்பு படை அதிகாரி ஒருவரும், போலீஸ்காரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

