மக்கள் பிரதமரிடம் வந்திருந்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கும் : சுமந்திரன்

267 0

அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட யாப்பு தற்போது புதிய உபாயம் மூலம் நகர்த்தப்படுகின்றது. இதன் வெளிப்பாடே கடந்த 12 தினங்களாக சுதந்திரக் கட்சியின் எந்த உறுப்பினர்களும் அது தொடர்பில் விமர்சனம் தெரிவிப்பது கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுபாஸ் விடுதியில் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜப்ரி அழகன் தலைமையில் இன்று இடம்பெற்ற தற்போதைய அரசியல் யாப்பு தொடர்பான நிலவரம் தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.

அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட யாப்பின் வழி நடாத்தல் குழுவின் அறிக்கை உள்ளிட்ட விடயங்களில் தற்போது புதிய உபாயம் மூலம் நகர்த்தப்படுகின்றது.

இதன் வெளிப்பாடே கடந்த 12 தினங்களாக சுதந்திரக் கட்சியின் எந்த உறுப்பினர்களும் அது தொடர்பில் விமர்சனம் தெரிவிக்காமையாகும்.

இராணுவம், தனியார் காணிகளை விட்டு அரச காணிகளுக்கு செல்ல வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரு இடங்களில் இடம்பெறும் மக்கள் போராட்டங்களில் புதுக்குடியிருப்பு பகுதிபை சேர்ந்த மக்கள் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு வருகைத் தந்தார்கள்.

இதன்போது தனியார்களுடைய காணிகளை விட்டு இராணுவம் அகல வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை நியாயமானது என்று பிரதமரும் ஏற்றுக்கொண்டார்.

இதன் காரணமாக உடனடியாக அதற்கு மாற்றீடாக அரச காணி அண்மையில் எங்கு உள்ளது என மாவட்ட அரச அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டறிந்து இராணுவத்தை அந்த இடத்துக்கு செல்லுமாறு வேண்டுகோள் அன்றே பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு விடுக்கப்பட்டது.

இதனால் இராணுவம் தனியார் காணிகளை விட்டு அரச காணிகளுக்கு செல்ல வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு அது கைகூடும் என எதிர்பார்கின்றோம்.

மக்களின் கவனயீர்ப்பு போராட்டங்கள் மூலம் தான் இந்த பேச்சுவர்த்தைக்கு சந்தர்ப்பம் கிடைத்தமை துர்ப்பாக்கியம்.

ஏனெனில் 2011ஆம் ஆண்டில் இருந்து ஒத்திவைப்பு பிரேரணையில் குறித்த விடயம் தொடர்பில் எடுத்து கூறியுள்ளோம், பல தடவை கூறினோம் அரசு செவிசாய்க்கவில்லை, இப்போதாவது மக்களின் போராட்டத்தின் பின்னர் செவி சாய்த்துள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்கள் பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு அன்றைய தினம் வருகை தரவில்லை.

அவர்களும் வந்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் இது தொடர்பில் நாமும் அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் .

நாம் கேப்பாப்பிலவு மக்களின் காணி மீட்பு சம்பந்தமான போராட்டம் தொடர்பாக பாராளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை கொண்டு வந்த போது 243 ஏக்கர் விடுவிக்கப்பட்டதாக கூறியதை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

அத்துடன் அந்த நிலங்கள் விடுவிக்கப்படும் என்றும் கூறினார்கள். ஆனால் விடுவிக்கப்படவுள்ள பகுதி இராணுவத்தினரிடம் உள்ள பகுதி எனவும் அதை மக்கள் தவறாக விமானப்படையினரின் பகுதியெனப் புரிந்து விட்டார்கள். என தெரிவித்தார்கள்.

எவ்வாறாயினும் விமானப்படை வைத்திருக்கும் பகுதிகளையும் விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி பிரதமரிடம் அண்மையில் பேச்சுவார்த்தைக்கு மக்கள் அழைக்கப்பட்டார்கள்.

அதற்காக அன்றைய தினம் விமானப்படை அதிகாரிகளும் வந்திருந்தனர்.

ஆனால் அந்த மக்கள் பேச்சுவர்த்தைக்கு வரவில்லை. வந்திருந்தால் ஒத்திவைப்பு பிரேரணையில் அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்த கருத்து உண்மையானதா? இல்லையா என்ற தெளிவு வந்திருக்கும்.

அதன் அடிப்படையில் நாங்களும் தொடர்சியாக அது குறித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

எவ்வாறாயினும் இவ்வாறான சந்திப்புக்கள் பேச்சுக்களுக்கு அந்த மக்கள் நடாத்திய போராட்டமே வழி ஏற்படுத்தியது. என மேலும் தெரிவித்தார்.