4000 வீடுகளை மலையக தோட்டப்பகுதிகளில் அமைக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது

285 0

4000 வீடுகளை மலையக தோட்டப்பகுதிகளில் அமைக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. மேலும் பல வீடுகளை பெற்றுத்தந்து, அதனை அமைத்து லயன் வாழ்க்கை வாழும் மக்களை குடியமர்த்த தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக உள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய இன்று காலை நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ பொகவனா தோட்டத்தில் அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின் இந்திய அரசாங்கம் வீடு இழந்தவர்களுக்கு வீடுகளை அமைக்க உதவி புரிந்தது.அந்த வகையில் மலையகத்திலும் தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு 4000 வீடுகளை பெற்றுக் கொடுத்தது.

2010 ஆம் ஆண்டு வீடுகளை அமைப்பதற்கு வாய்ப்புகள் கிட்டியிருந்தன. ஆனால் மலையகத்தில் இந்த வீடுகள் கட்டப்படவில்லை.அவ்வாறான துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் சென்றிருந்தோம். ஆனால் இன்று தனி வீடுகள் மலையகத்தில் மக்களுக்காக கட்டப்பட்டு வருகின்றது.

இந்திய பிரதமர் மோடி எங்களிடம் கூறினார், மலையகத்தில் மேலும் வீடுகளை கட்டுவதற்கு உதவிபுரிவதாக தெரிவித்தார்.

இலங்கையில் வீடமைப்பு அமைச்சர் மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் தனி வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடமும் கையளிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் தமிழ்நாடு நமது மக்களுக்கு தொப்புள் கொடி உறவாக செயல்படுகின்றது.

இந்தியாவிலிருந்து வந்து இங்கு வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்திய அரசாங்கம் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.இந்தவகையில் சுகாதார வசதிக்கென வைத்தியசாலைகள், கல்வியை ஊக்குவிக்க பாடசாலை அபிவிருத்திகள் என பல்வேறு மட்டத்திலும் உதவிகளை செய்து வருகின்றது.

தனி வீடு என்ற கனவை மலையக மக்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள வீடுகள் ஊடாக நனவாக்கப்பட்டு வருகின்றது.இன்னும் பல தேவைப்பாடுகள் மலையக மக்களுக்க இருக்கின்றது. இப்படியாக அந்த தேவைப்பாடுகளை நாம் பூர்த்தி செய்வதில் தமிழ் முற்போக்கு கூட்டணி செயல்பட்டு வருகின்றது.

இந்தியாவில் தமிழ்நாட்டு பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக அந்த பாரம்பரியத்தை விடுக்கொடுக்காமல் இந்த விளையாட்டினை தடை செய்யாது இருப்பதற்காக அங்குள்ள மக்களும் பாடசாலை மாணவர்களும் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அவர்களின் ஒற்றுமையான போராட்டம் ஜல்லிகட்டு விளையாட்டை நடத்த வைத்தது.

அந்தவகையில் இந்த கலாசாரத்தை விடுக்கொடுக்க கூடாது என்பதற்காக இந்தியாவின் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவினால் இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையிலும் போராட்டங்களை நடத்தினர்.

இவ்வாறாக ஒற்றுமையான சக்தி நமது மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இருக்கின்றது. இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிர்காலத்தில் உரிமைக்காக போராடுவதற்கு அனைவரும் தயாராகவே இருக்க வேண்டும்.

போராட்ட ரீதியில் பல்வேறு உரிமைகளை பெறவேண்டி உள்ளது. இந்திய அரசியலில் தற்பொழுது பல போராட்டங்கள் இடம்பெறுகின்றது. அங்கு முதலமைச்சர் சசிகலாவா ? அல்லது பன்னீர் செல்வமா ? என்ற போராட்டம் இருக்கின்றது.

தமிழ் நாட்டில் நல்லதோர் அரசியல் நிலைமை உருவாக வேண்டும். யார் தமிழகத்தில் ஆட்சி செய்தாலும் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.