தடையை மீறி மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை: ஜப்பான் கடும் எச்சரிக்கை

264 0

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா மீண்டும் சோதனை செய்ததாக சியோல் பாதுகாப்பு அமைச்சகம்  தகவல் தெரிவித்தது.வடக்கு பியோங்கன் பிராந்தியத்தில் இருந்து இந்த ஏவுகணையை காலை 7:55 மணிக்கு பங்க்யான் ஏவுதளத்தில் இருந்து  ஜப்பானின் கடல் எல்லையில் விழும்படி வடகொரியா சோதனை செய்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு வடகொரியா சோதனை செய்யும் முதல் ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ள வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை சோதனை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளை வடகொரியா நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.இதனிடையே, ஜப்பானுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.