மியான்மர்: மரகதச் சுரங்கத்தில் மண்சரிவில் சிக்கி 9 பேர் பலி

355 0

மியான்மர் நாட்டில் மரங்கதச் சுரங்கத்தில் மண் குவியலில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள கச்சின் பகுதியில், பல மரங்கதச் சுரங்கங்கள் உள்ளன. அந்தச் சுரங்கங்களிலிருந்து அகற்றப்படும் மண், சுரங்கத்தின் வெளியே குவித்து வைக்கப்படும். மிகச் சிறிய மரகதக் கற்களுக்குக் கூட கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு கிடைத்து வருகிறது. இதனால், அந்த மண் குவியலில் மறைந்து கிடக்கும் சிறிய மரகதக்கல் துண்டுகளைத் தேடுவதில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சுரங்க மண் குவியலில் அதிகமானோர் மரகதக் கற்களைத் தேடி வந்தனர். அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் இருந்த ஏராளமான நபர்கள் மண்ணில் புதைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் மண் குவியலை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த மண்சரிவில் சிக்கி 9 பேர் பரிதாபமாக பலியானதாகவும், காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.