தமிழக கவர்னர் பாரபட்சமின்றி செயல்படுகிறார்: வெங்கையா நாயுடு

273 0

தமிழக கவர்னர் பாரபட்சமின்றி செயல்படுகிறார், அவருக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக அரசியல் நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். அரசியல் சட்டப்படி, தனது கடமையை ஆற்றி வருகிறார். பாரபட்சமின்றி தனது கடமையை செய்து வருகிறார். அவருக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம்.

தமிழ்நாட்டில் முதல்- அமைச்சர் பதவிக்கு காலியிடம் எதுவும் இல்லை. அங்கு ஒரு முதல்-அமைச்சர் தலைமையில் அரசு நடந்து வருகிறது.

இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை, அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சினை. அதற்கு அக்கட்சி தலைவர்களே தீர்வு காண்பார்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் தலையிடுவதாக கூறுவது நியாயமற்ற விமர்சனம்.

மேலும், தமிழக சட்டசபையில் பா.ஜனதாவுக்கு உறுப்பினர் இல்லை. எனவே, அங்கு நாங்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. நாங்கள் எந்த களத்தையும் தயார்படுத்தவில்லை.

போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக ஆக்கும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் யோசனையை நான் வரவேற்கிறேன். இது நல்ல விஷயம் என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். ஆனால், இதில் மத்திய அரசுக்கு தொடர்பு எதுவும் இல்லை. யாருமே அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடாதநிலையில், அ.தி.மு.க. தலைவர்கள்தான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.