தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு இன்று கூடுகிறது

357 0

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தங்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சசிகலா கல்பாக்கம் கூவத்தூரில் உள்ள ஓட்டலில் தங்க வைத்துள்ளார்.

சட்டசபை அ.தி.மு.க. கட்சி தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், முதல்-அமைச்சராக பதவிஏற்க அவருக்கு கவர்னர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. இது தொடர்பாக நேற்று முன்தினம் கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு, தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று சசிகலா கடிதம் எழுதினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக கவர்னர்(பொறுப்பு) வித்யாசாகர்ராவை சந்தித்து, சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும், எம்.எல்.ஏ.க்களை வெளிப்படையாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவி வரும் சூழ்நிலையில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் 13-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை, உள்ளாட்சி தேர்தல், தமிழக வறட்சி நிலவரம் குறித்து விவாதிக்கப்படுகிறது. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஓ.பன்னீர்செல்வத்தை தேவைப்பட்டால் தி.மு.க. எல்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பார்கள் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் தி.மு.க.வின் செயல் திட்டம் வகுக்கப்படுகிறது.