விவசாயிகளுக்கு நிவாரண உதவி உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

265 0

தமிழகத்தில் நடைபெறும் அதிகாரப்போட்டியால் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

யானைகளுக்கு இடையில் நடைபெறும் மோதலில் எறும்புகள் நசுங்கி இறந்ததைப்போல, தமிழகத்தில் இரு குழுக்களிடையே நடைபெற்று வரும் அதிகாரப்போட்டியில், உழவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் கண்டுகொள்ளப்படாமல் மறைக்கப்படுகின்றன. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீடும் இதுவரை வழங்கப்படாததால் தமிழகம் முழுவதும் உள்ள உழவர்களின் துன்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அரசின் நிவாரண உதவிகள் அனைத்தும் மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைத்ததும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். முதல்-அமைச்சர் அறிவித்த நிவாரண உதவி உழவர்களின் துயரங்களைத் தீர்க்க போதுமானது இல்லை என்றாலும், அந்த உதவி உடனடியாக கிடைத்தால் கடன் தொல்லை மற்றும் இதர பாதிப்புகளில் இருந்து ஓரளவாவது மீளலாம் என உழவர்கள் எண்ணினர்.

ஆனால், நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு 34 நாட்களாகியும் இன்று வரை அவை வழங்கப்படவில்லை. வறட்சி நிதி வழங்கக்கோரி மத்திய அரசிடம் மனு கொடுத்து ஒரு மாதமாகியும், மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. தமிழக ஆட்சியாளர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து நிவாரண உதவியை பெறுவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் உழவர்கள் வாங்கிய கடனும், அதற்கான வட்டியும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டி இப்போதைக்கு முடிவுக்கு வருவதாக தோன்றாத நிலையில், தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் மூலம் மத்திய அரசே நேரடியாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். அதேநேரத்தில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவிகள் போதாது என்பதால், நிவாரணத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும்.

உச்சவரம்பும், நிபந்தனையும் இல்லாமல் அனைத்து உழவர்களின் பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதமும், நீண்டகால பணப்பயிர்களுக்கு சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு ரூ.1 லட்சம் வரையிலும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.

அத்துடன், அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த அனைத்து உழவர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.